Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள்!

05 Nov 2026 4 நிமிட வாசிப்பு வீடியோ
நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு கைரேகைதான் முக்கியமா ?
கட்டைவிரல் கைரேகை என்பது நம்முடைய மரபணு குறியீடு (Genetic code) ஆகும். இதில் சூட்சுமங்கள் நிறைய உள்ளன. இதுதான் முந்தைய பிறவியின் ரகசியத்தை திறப்பதற்கான திறவுகோல் (Key). ஒருவேளை கைரேகை இல்லையெனில், அவர்களின் ஜனன கால குறிப்பு வேண்டும். அவர்களின் பிறந்த வருடம், மாதம், தேதி பொருந்தும் ஓலையை எடுத்து படிக்கும் பொழுது அவர்களின் குடும்ப விவரங்கள், தந்தை பெயர், தாயார் பெயர், மனைவி பெயர், எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது சரியாக வரும்பொழுது, நாடி ஜோதிடத்தை ரேகை மூலமாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லது கிரகங்களை வைத்துத்தான் பலனை தெரிந்துகொள்ள வேண்டும் என்று மகரிஷி அதில் குறிப்பிட்டிருப்பார்.

எல்லா விவரங்களும் எப்படி துல்லியமாக வருகின்றன?
இது எல்லாமே மகரிஷியினுடைய சூட்சுமங்கள். உதாரணத்திற்கு, இன்று ஒரு மருத்துவமனையில், ஒவ்வொரு சில நிமிட இடைவேளையில் பல குழந்தை பிரசவிக்கப்படுக்கிறது. அனைவருக்கும் ஒரே கிரக நிலை, ஒரே நட்சத்திரம், ஒரே ராசி, ஒரே லக்னங்கள் அமையும். அதேபோல ஒரே மாதிரியான அப்பா, அம்மா பெயர் கொண்டவர்களும் சிலர் இருப்பார்கள். ஆனால், ரேகை மற்றவர்களுக்கு பொருந்தாது என்பதால் தான் மகரிஷி கைரேகைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். மற்ற ஜோதிடங்களில் சொல்ல முடியாத விஷயங்களை நாடி ஜோதிடத்தில் சொல்ல முடியும்.

இரட்டை குழந்தைகளுக்கு ஒரே கிரக நிலை இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை முறை வேறு மாதிரி இருக்கும். நாம் ஒரே மாதிரி உடை வாங்கி உடுத்தினாலும், அவர்களின் குணத்தை ஒன்றாக கொண்டு வர முடிவதில்லை. அதுதான் கர்மா. நீங்கள் எவ்வளவு பெரிய மகானை சந்தித்தாலும் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? 'உன் கர்மா, நீ அனுபவிக்கிறாய், உன் கர்மத்தை போக்கு' என்பார்கள். கைரேகையை கொண்டு தற்போதைய வாழ்க்கையை (Present life) மட்டும் அல்லாமல், ஏழு ஜென்மங்களின் வரலாற்றையும் எடுத்துவிடலாம். அடுத்த ஜென்மம் எப்படி, எந்த ஊரில், எந்தத் தேசத்தில் பிறப்பார், என்ன மாதிரியான பெயர் அமையும் என்பதையும் சொல்லிவிடலாம்.

நாடி ஜோதிடத்தில் வரும் தகவல்கள் சிலருக்கு வருத்தத்தை கொடுக்குமா ?
வாழ்க்கையை தெரிந்துகொள்ள வரும்பொழுது, எத்தனை பேர் உடன் வந்தாலும் அவர்களை முதலில் வெளியில் அமர சொல்லிவிடுவேன். ஏனெனில், இது உங்களுக்கான ரகசியம். இதை நீங்கள் மட்டும்தான் தெரிந்துகொள்ள வேண்டும். சிலர், 'பரவாயில்லை, அவர்கள் இருக்கட்டும்' என்பார்கள். 'சரி, அதன்பின் வரக்கூடிய விளைவுகள் உங்களுடையவை' என்று கூறிவிடுவேன். ஏனெனில், சந்தோஷத்தில் பண்ணக்கூடிய விஷயம் நாளைக்கு வருத்தம் வரும்போது பெரியதாக தெரியும்

நாடி ஜோதிடம் என்பது வாழ்க்கையின் வழிகாட்டி மற்றும் வாழ்க்கையின் பயணம் ஆகும். எப்பொழுதுமே சந்தோஷமும், வருத்தமும் இருக்கப்போவதில்லை. 'இது உங்களுடைய வாழ்க்கை முறை, இப்படித்தான் வாழ்க்கை இருக்கப்போகிறது. இந்த வயதில் நீங்கள் நன்றாகச் சந்தோஷமாக இருக்கப்போகிறீர்கள், சில காலகட்டங்களில் பிரச்சனைகள் வரும், அதற்கு குடும்ப நபர்கள் காரணமாக இருக்கலாம் அல்லது நம்முடைய செயல்களே காரணமாக இருக்கலாம்' என்று சொல்லி விடுவோம். 'இது ஒரு வழிகாட்டி, இதில் சொல்லியபடி நடந்தால் சேதங்களையும், ஆபத்துகளையும் தவிர்த்துக்கொள்ளலாம்'. இதை அறிவுரையாக (Advice) எடுக்க வேண்டாம். இதில் அகந்தை (Ego) கொள்ள வேண்டாம். 'நீங்கள் என்ன சொல்வது, சொன்னால் நடந்துவிடுமா?' என்றெல்லாம் சோதிக்காதீர்கள். தெரிந்துகொள்வதற்கான ஒரு பாக்கியத்தைக் கடவுள் கொடுத்திருக்கிறார். அதன்படி வாழ்க்கை வாழும்போது பல பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

'என்னுடைய ரகசியங்கள் எல்லாம் வெளியில் வருகிறதே' என்று சிலர் கவலையடைந்தால் அவர்களை எப்படி சமாதானப்படுத்துவீர்கள் ?
நான் ஒரு கருவிதானே, கடவுள் கிடையாது. முதலில் நான் வருபவர்கள் யாரையுமே வாடிக்கையாளராக, வணிகமாக (Business) பார்ப்பதில்லை. அவர்கள் என்னைத் தேடி வரவில்லை, அகஸ்தியரைத் தான் தேடுகிறார்கள். குருநாதர் எனக்கு இந்த வேலையை கொடுத்திருக்கிறார், அவர்களுக்கு நான் படித்து கொடுக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்கிறேன். சிலர் தன்னம்பிக்கை இழந்து, விரக்திக்குச் சென்று, 'நாம் வாழவே முடியாது' என்று வந்தவர்கள் எல்லாம் இன்று நல்ல ஆரோக்கியத்தோடும், சந்தோஷத்தோடும், பொருளாதாரத்தோடும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அதற்கு குருநாதர் தான் காரணம்.

ஜெர்மனியிலிருந்து மூன்று பேர் வந்தார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களுக்கு இதில் ரொம்ப நம்பிக்கை. ஒரு ஆண் தன் கைரேகையை கொடுக்கிறார். ஆனால், ஓலையில் வரக்கூடிய விஷயம் 'இவர் ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத மனிதர்' என்று கூறுகிறது. மொழிபெயர்ப்பாளர் 'You are...' என்று தடுமாறுகிறார். உடனே அவர் 'ஆம், நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் (i am Gay)' என்றார். அதில், 'ஒரு ஆணால் மனது கஷ்டப்படுகிறது, நீ காதலிக்கக்கூடியவர் ஒரு ஆண் நபர்' என்று வந்தது. அவருக்குப் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. அவருடன் வந்த மற்ற இருவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியதால், உடனே அவர்களும் தங்களின் கைரேகையை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

போலி நாடி ஜோதிடத்தை எப்படி கண்டுபிடிக்க முடியும்?
நாடி ஜோதிடத்திற்கு உரிய ஒரே குலம் என்பது வள்ளுவர் குலம். என்னுடைய தாத்தா, தகப்பனார் செய்தது நாடி ஜோதிடம். ஜோதிடம் என்னுடைய மரபிலேயே வந்தது. சரியான இடத்திற்கு நாடி படிக்கும்போது செய்யுளின் ஒவ்வொரு வார்த்தையையும், அதனுடைய பொருளோடு படித்து விளக்குகிறோம். அப்பா, அம்மா பெயர் மட்டும் சரியாக இருந்துவிட்டால் அது உங்களுடைய ஓலை கிடையாது. ஒரே அப்பா, அம்மா பெயர் கொண்டவர்கள் பலர் இருப்பார்கள். அதேபோல நம் பெயர் சரியாக இருந்துவிட்டால் அது நம்முடைய ஓலை கிடையாது. நம் பெயர் கொண்டவர்களும் பலர் இருப்பார்கள். அவருடைய பிறப்பின் அனைத்து ரகசியங்களும் அதில் பொருந்த வேண்டும்.

ஓலை எடுக்கும்பொழுது, நம்முடைய எல்லா விவரமும் அதில் சரியாக வர வேண்டும். உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கை, எத்தனை கரு கலைந்திருக்கிறது, எத்தனை குழந்தைகள் பிறந்து இறந்திருக்கின்றன என்ற விஷயங்களை பார்க்க வேண்டும். என்ன படித்திருக்கிறார், என்ன செய்கிறார், மருத்துவமனையில் பிறந்தாரா, வீட்டில் பிறந்தாரா என்ற எல்லா விஷயங்கள் வர வேண்டும். அப்பா, அம்மாவை பற்றிய விவரம், எத்தனை கல்யாணம் செய்திருக்கிறார்கள், எத்தனையாவது மனைவிக்கு இவர் பிறந்திருக்கிறார் என்ற விவரங்கள் வர வேண்டும்.

சிலர், அப்பா, அம்மா பெயர் சரியாக இருக்கிறது, பிறந்த தேதி பொருந்துகிறது என்றதும், 'இது உங்கள் ஓலை' என்று சொல்லிவிட்டு, அவர்களை முறையாக (notebook) எழுதி படித்துக் கொடுக்க மாட்டார்கள். 'எனக்கு முறையாக குறிப்பேட்டில் (notebook) எழுதிக் கொடுங்கள்' என்று கேட்கும்பொழுது உண்மை தன்மை தெரிந்துவிடும். இந்த நாடியில் அத்தியாயம் வரும்பொழுது,

'ஆனைமுகன் தன்னுடைய பாதம் போற்றி அறிவிப்பேன் மகன் ஒருவன் பொதுவின் உண்மை...'
என்று வரும். இதுதான் சூட்சுமம். அடுத்த நான்கு வரிகள் வரும். அந்த நான்காவது வரியினுடைய முடிவு, ஐந்தாவது வரியினுடைய தொடக்கமாக இருக்கும். (அபிராமி அந்தாதி பாடல் மாதிரி). ஏமாற்று வேலை செய்பவர்களால் அதை எழுத முடியாது. ஓலையில் இருந்தால்தான் எழுத முடியும். அப்பொழுது உண்மையை நாம் கண்டறிந்து கொள்ளலாம். ஏற்கனவே வேறு இடத்தில் எழுதிய குறிப்பேட்டை பார்த்தாலே உண்மை தன்மை தெரிந்துவிடும்.

நாம் சென்று நாடி ஜோதிடம் பார்க்கின்ற இடத்தில் நமக்கு திருப்திகரமான விஷயங்கள் கிடைக்கவில்லை என்பதை கர்மா என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?
நல்லதை தெரிந்துகொள்வதற்கு நல்ல நேரம் வர வேண்டும். சரியான இடத்தை ஆய்வு செய்துவிட்டுத்தான் போக வேண்டும். முதலில் மக்களிடம் பொறுமை இல்லை. முன்பெல்லாம் இங்கிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு 2 நாள் பயணமாக தேடி சென்று நாடி ஜோதிடம் பார்த்தார்கள். இன்றும் எங்களுடைய பெரியவர்கள் அங்கே இருக்கிறார்கள், எங்களுக்கான ஆசிரமங்கள் இருக்கின்றன. அங்கும் சில கலப்படங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் சென்று, 'இது வள்ளுவர் குல நாடி ஜோதிடர்கள்தானா?' என்று கேட்டு அறிய வேண்டும்.

(பூ விழுகிறது)

நீங்கள் சில விஷயங்கள் சொல்லச் சொல்ல அகத்தியர் மேலிருந்து பூ விழுந்துகொண்டே இருக்கிறது. இப்பொழுது நானே சிலரை தேடிப் போனால் கூட, 'அவர்கள் உயிரோடு இல்லை' என்கிறார்கள். இங்கே பக்கத்து தெருவில் இருக்கிறவர்கள் இணையத்தில் (Online) தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வாழ்க்கையை பற்றித் தெரிந்துகொள்ள அதற்கான நேரத்தை ஒதுக்கலாமே? சினிமா திரையரங்கிற்கு சென்று பல மணி நேரம் அமர்கிறோம், பொழுதுபோக வேண்டும் என்று இங்கிருந்து எங்கேயாவது வாகனம் எடுத்துdக்கொண்டு வெளியில் செல்கிறோம், மூன்று மணி நேரம் சுற்றுகிறோம். ஏன் வாழ்க்கை பற்றிய விஷயங்களை தெரிந்துகொள்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை? ஆக, வருபவர்கள் தும் தவறு இருக்கிறதுதானே?

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.