Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

எல்லா நாளும் இறைவனுக்கே உரியது

05 Nov 2026 2 நிமிட வாசிப்பு வீடியோ
முருகனுக்கு அல்லது பெருமாளுக்கு உகந்த நாள் என்று ஒட்டுமொத்த மக்களுமே தரிசிக்க வரிசையில் நிற்கிறார்கள். அதனால் சில எதிர்பாராத விபத்துகளும் ஏற்படுகிறது. ஒரு பிரார்த்தனையுடன் எந்த நாளிலும் சென்று இறைவனை பார்க்கலாமா ?
செவ்வாயின் அதிதேவதை முருகன். அதனால் செவ்வாய்க்கிழமை முருகருக்குரிய நாள். சிவப்பு மலர்கள் போன்ற சிவப்பான எல்லாவற்றையுமே முருகன் என்று எடுத்துக்கொள்கிறோம். அப்படி வந்ததுதான் அரளி மலர்.

மன அமைதிக்கு செவ்வாய்க்கிழமை முருகனை பார்க்க வேண்டும், திங்கட்கிழமை சிவனைப் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. கூட்டத்தில் போகும்போது திருப்தி இல்லாமல், நாலு பேர் நாலு விதமாகப் பேசுவது, ஒருவரை ஒருவர் தள்ளிக்கொள்வது என மன உளைச்சல்தான் மிஞ்சும். எல்லா நாளுமே தெய்வங்களுக்கு உகந்த நாள்தான். எப்பொழுதும் தெய்வத்தைச் சென்று பாருங்கள். இறைவன் கட்டாயம் அனுக்கிரகம் பண்ணுவார். சந்தோஷமாகப் பார்த்துவிட்டு வர வேண்டும். இந்த நாளில் தான் சென்று வழிபட வேண்டும் என்று புராணங்களில் எழுதப்படவில்லை.

சில கோவில்களில் எப்போதுமே கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் வீட்டுப் பக்கத்தில் இருக்கக்கூடிய கோவிலில் கூட்டம் இல்லாமல் இருக்கும். எங்கே போகலாம் ?
பிரதானமான, புராதனமான கோவில்களுக்கு செல்லலாம். ஆனால் கட்டாயம் கிடையாது. மனதார பழனி முருகனை நினைத்து பிரார்த்தனை வைக்கலாம் என்ற விதி இருக்கிறது. ஆனால், பரிகாரங்களுக்கு இது எடுபடாது. பரிகாரம் செய்ய மகரிஷிகள் சொல்லியிருக்கும் கோவிலுக்குத்தான் சென்று வழிபாடு செய்ய வேண்டும். 'அதுவும் சிவன், இதுவும் சிவன் தானே' என்று நினைத்து கும்பிடக்கூடாது. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. சுவாமி திருமேனியிலிருந்து வரக்கூடிய பிரசாதத்தை சாப்பிட நிறைய காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

நேர்த்திக்கடனை திருப்பதியில்தான் செய்ய வேண்டுமா? நம்மை சுற்றி இருக்கக்கூடிய ஒரு பெருமாள் கோவிலில் செய்யலாமா?
108 திவ்ய தேசங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று கொடுக்கலாம். ஸ்ரீரங்கத்தில் வந்து கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு திருப்பதியில் போய் கொடுக்க முடியாது.

மனதார நம் வீட்டுப் பக்கத்தில் இருக்கக்கூடிய பெருமானையோ, முருகனையோ தரிசிக்கலாமா?
பரிகாரங்கள் என்பது வேறு, நித்திய பூஜை என்பது வேறு. எல்லோரும், ஒரே நாளில், ஒரே கோவிலில் சென்று தரிசிக்கிறோம். ஆனால் அங்கே செல்பவர்கள் யாருமே நிம்மதியாக சாமி கும்பிட முடியாது. சில விபத்துகளை தாண்டி, மன உளைச்சல் ஏற்படுகிறது. பணம் இருப்பவர்கள் பணம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று தரிசனம் செய்கிறார்கள். கடவுளிடம் வியாபாரத்தை, பண பலத்தை காட்டக்கூடாது. வரிசையில் காத்திருந்து இறைவனை தரிசிக்கக்கூடிய எல்லாருக்குமே இறைவனின் அருள் (அனுக்கிரகம்) கிடைக்கும்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.