Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

மறைந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யாததால் ஏற்படும் பாதிப்பு

04 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
என்றைக்கும் தர்மத்தை மீறக்கூடாது என்பதில் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். ஏனென்றால், இறைவனுக்கு முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். இதுவரைக்கும் என் மனசாட்சிப்படி தர்மத்தை மீறவில்லை. இன்றைக்கு எல்லாமே சந்தோஷமாக இருக்கும். அவர் குறித்து கொண்டுதான் இருக்கிறார். யாருக்குத் தெரியப் போகிறது என்று 4 சுவற்றுக்குள்ளே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லாமே கண்காணிக்கப்படுகிறது.

Auto writing தானாக எழுத்து வருவது என்றால் என்ன?
'ஜீவநாடி' என்பது ஓலையில் எதுவுமே இருக்காது. ஒருத்தருக்கு ஜீவநாடி படிக்கும் பொழுது அந்த நேரத்தில் எழுத்துக்கள் தோன்றும். அந்த எழுத்து, ஞானம், அதனை படிக்கிறவர்களுக்கு மட்டும் தெரியும். என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறோம், நம் கேள்விக்கான விடை மகரிஷி அதில் கொடுப்பார்.

சில குடும்பங்களில் விபத்தால் அகால மரணம் ஏற்படுகிறது. அவர்கள் உடனே மறுபிறவி எடுத்து விடுவார்களா ?
இறந்த ஆத்மா என்ன ஆகப்போகிறது என்று கேட்கிறீர்கள். பரமேஸ்வரன் தான் மரணத்தைத் தீர்மானிக்க கூடியவர். ஒருவருடைய வாழ்க்கை 80 வயது வரை என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவருடைய கர்ம வினைப்படி, 48 வயதிலேயே இறக்க வேண்டும், அவருக்கு ஒரு கண்டம் இருக்கும். அதற்குரிய பரிகாரங்களை, பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துகொண்டால் ஓரளவுக்கு தப்பலாம். அவ்வாறு தப்பும் பொழுது, 80 வயது காலம் வரை வாழ முடியும். அதைமீறி இறந்துவிட்டால், 80 வயது காலம் முடியும் வரை ஆத்மா மறுஜென்மம் எடுக்காது. சுற்றிக்கொண்டுதான் இருக்கும்.

அவர்களுக்கு 80 வயதில் மோட்சம் என்று இருந்தால், அவர்கள் 75 வயதிலே இறந்தால் கூட மீதி 5 வருட காலம், அந்த ஆத்மா பிறப்பு எடுக்காமல் அங்கேதான் நிற்கும். அந்த ஆத்மா நமது வீட்டிற்கு வரும். அதனால்தான் எல்லாரிடமும் சொல்வது, தயவுசெய்து இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணங்களை முறையாக செய்யுங்கள். அந்த ஆத்மா வீட்டிற்கு வரும்போது, 'நமது வாரிசுகள் நமக்காக ஒண்ணுமே செய்யவில்லையே' என்ற ஏமாற்றத்துடன் போகக்கூடாது. அதுவே நமக்கு சாபமாகும். நம்முடைய சந்ததியைப் பாதிக்கும். இது பலருக்கு தெரிவதில்லை. இதை ஒரு பொருட்டாகவே பலர் எடுத்துக் கொள்வதில்லை. அதுதான் வருத்தமான செயலாகிறது.

யோகமான ஜாதகம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல் 'அபூர்வமான நாடி' என்று எதாவது பார்த்திருக்கிறீர்களா?
நாடி ஜோதிடம் என்பது முழுக்க மகரிஷிகளால் கொடுக்கப்பட்ட பொக்கிஷம். இதை உயர்த்துவதற்கோ அல்லது தாழ்த்துவதற்கோ நமக்கு அதிகாரம் கிடையாது. இதை சோதிக்க நினைத்தவர்கள் எல்லாம் வீழ்ந்த கதைகள் பல உண்டு. நாடி ஜோதிடத்தைப் பற்றி அவதூறாக பரப்புரை செய்தவர்கள் இன்று காணாமல் போயிருக்கிறார்கள். நான் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. என் அனுபவத்தில் பலருடைய வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். மகரிஷியை எந்த விதத்திலும் நாம் சோதிக்கக் கூடாது. அவர் குரு, இறைவன்.

பிரம்மா நம்முடைய பாவத்தைக் கழிப்பதற்காக இந்தப் பிறப்பைக் கொடுத்திருக்கிறார். பிரம்மா எதற்காக நம்மைப் படைத்திருக்கிறார் என்பதை முழுமையாக உணர்ந்தவர்கள் மகரிஷிகள். பிரம்மாவின் இடத்தில் அவர் இருக்கிறார். 'நீ போகிற பாதை சரியில்லை, தவறான பாதையில் போகிறாய். உன் வாழ்க்கையை நான் எழுதுகிறேன், 'நீ அதை சரி செய்துகொள்' என்று உணர்ந்து எழுதியவர்கள் மகரிஷிகள். அவர்களை நாம் சோதிப்பதற்கோ, அவர்கள் கொடுத்த பொக்கிஷத்தை தவறாகப் பேசுவதற்கோ யாருக்கும் அதிகாரம் கிடையாது.

முதல் முறை நாடி பார்க்கும் போதுதான் ரேகை கொடுக்கிறோம். 5 வருடம் கழித்து மீண்டும் நாடி பார்க்க வேண்டும் என்றால் அதற்கு என்ன முறை?
5 வருடம் கழித்து மீண்டும் முதல் காண்டத்தை பார்க்க மாட்டீர்கள். 20 வயதில் நாடி பார்க்கிறீர்கள் என்றால், அப்போது கல்வியும், வேலையும் முக்கிய காரணமாக இருக்கும். 5 வருடம் கழித்து திருமணத்தை பற்றி அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் திருமண காண்டத்தை எடுத்துப் பார்ப்போம். 25 வயது என்பது வேலை சம்பந்தப்பட்ட காலகட்டமாக இருக்கும். தொழில் காண்டத்தை பார்க்க வேண்டியிருக்கும். வயதிற்கு ஏற்ப பலன்கள் மாறுகின்றன. 5 வயது குழந்தையின் படிப்பு, வளர்ச்சி, ஆரோக்கியம், அவருடைய அப்பாவிற்கு யோகம் வருமா என்பதை பற்றிப் பேசுவோம். அதுதான் அந்த நேரத்திற்கு தேவையான பலன். அந்த நேரத்தில் திருமணத்தை பற்றி பேசினால் பயனற்றது.

20 வயதில் அடிப்படை விஷயங்களைச் சொல்லி அனுப்பிவிடுகிறீர்கள். அதே நபர் 30 வயதில் திருமணத்திற்காக வந்து பார்த்தால்?
20 வயதில் வந்து பார்க்கும் பொழுதும், அந்த வயதிலிருந்து வாழ்க்கை முடிவு வரை என்ன நடக்கும் என்பதை சொல்கிறோம். ஆனால், அந்தந்த காலகட்டத்தில் எது முக்கியம் என்று இருக்கிறது. 32 வயதில் திருமணம் பிறகு, வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இரண்டாவது காண்டம் -குடும்ப காண்டம் எடுத்து பார்ப்பார்கள். அதாவது குடும்ப வாழ்க்கை, பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பது அந்த நேரத்தில் அவசியப்படும். அவர்களுக்கு குழந்தை எப்பொழுது, என்ன மாதிரியான குழந்தை ? ஏன் தாமதமாகிறது? கருத்தரிப்பதற்கான வழி மற்றும் தீர்வு என்ன? இவையெல்லாம் அவர்களுக்கு தேடலாக இருக்கும்.

ஒருமுறை நாடி எடுத்துவிட்டால் போதுமானது கிடையாது. அந்தந்த வயதிற்கு தகுந்தாற்போல, அந்தந்த காலகட்டத்தில் என்ன தேவைகள் இருக்கிறதோ, அது சம்பந்தப்பட்ட காண்டம் எடுத்து பார்க்க வேண்டும்.

சிலருக்கு Autism பாதிப்புள்ள குழந்தைகள் பிறக்கிறதே? அதை நீங்கள் முன்கூட்டியே சொல்கிறீர்களா?
சொல்லியிருக்கிறோமே! உங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடையாது, நீங்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டிய 'சுவீகார' பிராப்தம் தான் உண்டு என்று சொல்லியிருக்கிறோம். ஏன் அந்த நிலை வந்திருக்கிறது ? அவர்களுடைய 5-வது பாவகம் மற்றும் அதற்குரிய பாவக சாந்தியை எடுத்து பார்த்தால், என்ன மாதிரியான கர்மா, ஏன் குழந்தை தங்கவில்லை என்பது முழுமையாக வந்துவிடும்.

முன் ஜென்மத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா?
கண்டிப்பாக. உங்கள் நாடியை பார்க்கும்போது உங்களுக்கு நீங்கள் யார் என்று தெரியும். இந்த ஆன்மா யார் என்று தெரியும். ஏன் மனிதனாகப் பிறக்க நேரிட்டது? மனிதனாக பிறக்கக்கூடிய ஒவ்வொருவருமே கர்மம் செய்தவர்கள்தான். புண்ணியம் மட்டுமே செய்பவர்கள் மனிதனாக பிறக்க மாட்டார்கள். கடவுளின் திருவடியிலே நின்று பூஜிக்கக்கூடிய அர்ச்சகர்கள், குருமார்கள் எல்லாருமே ஏதோ ஒரு பாவம் செய்தவர்கள்தான். பாவம் செய்யாத மனிதன் கிடையாது.

வாழ்க வளமுடன். நன்றி, வணக்கம்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.