Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

கோவில் தரிசனத்தில் தவிர்க்க வேண்டியவை

05 Nov 2026 2 நிமிட வாசிப்பு வீடியோ
நாம் கோவிலுக்கு போகும்போது என்ன மாதிரியான மனநிலையோடு போக வேண்டும்? எந்த மாதிரியான விஷயங்களைச் செய்துவிட்டு போகக்கூடாது? உதாரணத்திற்கு, அசைவம் சாப்பிட்டுவிட்டு போகக் கூடாது என்றெல்லாம் சொல்லுவார்கள்.
வள்ளலாரும் புலால் உண்ணுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார். இன்று கோவிலுக்கு போகிறோம் என்றால், நேற்று சாப்பிட்ட கழிவு நம் வயிற்றுக்குள்ளே தானே இருக்கிறது? அப்பொழுது உடல் சுத்தம் ரொம்ப முக்கியம். இதையெல்லாம் பேசினால் திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். மாமிசம் சாப்பிடக்கூடிய குடும்பமாக இருந்தால், இரண்டு நாட்களுக்கு முன்னரே மாமிசம் சாப்பிடக்கூடாது. ஆணாக அல்லது பெண்ணாக இருந்தாலும் தலைக்குக் குளித்துவிட்டுத்தான் போக வேண்டும். தலைவிரி கோலத்தோடு கோவிலுக்கு போகக்கூடாது. வீடுகளிலும் தலைவிரி கோலத்துடன் இருக்கக்கூடாது. கோவிலுக்கு போகும்போது சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும். பொட்டு, குங்குமம் கண்டிப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இன்று நிறைய போலியான பொருட்கள் வந்துவிட்டன. குங்குமம் கூட அசல் கிடையாது, நெற்றி அரிக்க ஆரம்பித்துவிடுகிறது. 100% சுத்தமான பொருளாக கிடைக்காவிட்டாலும், ஓரளவு சுத்தமானதை பயன்படுத்துங்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக, சந்தோஷமாக போய்விட்டு வாருங்கள். கட்டாயம் உங்களுக்கு கடவுளின் அருள் உண்டு.

கோவிலுக்கு போய்விட்டு வரும்போது மாமிசம் சாப்பிடலாமா?
அதுவும் வேண்டாமே. தெய்வத்தை பார்த்துவிட்டு நேராக நம் வீட்டிற்குத்தான் வர வேண்டும். ஒரு செயலை செய்வதை திறம்படச் செய்ய வேண்டும். இல்லையென்றால் செய்யாதீர்கள். நம் இஷ்டத்திற்கு விதிகளை போடக்கூடாது. 'யாருக்குத் தெரியப் போகிறது' என்று நினைத்து எல்லாவற்றையும் மறைத்து செய்கிறோம். ஆனால், எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே சித்திரகுப்தன் இருக்கிறார். நம்மை நாமே ஏமாற்றி கொள்ளலாமே தவிர, தெய்வத்தை ஏமாற்ற முடியாது.

பரிகாரத்திற்காகக் கோவிலுக்கு போய் எள் விளக்கு ஏற்ற வேண்டும், தானியங்கள் வைத்து ஏற்ற வேண்டும் என்று சொல்லுவார்கள்.?
இது எல்லாமே நம்மால் உருவாக்கப்பட்டது. சனீஸ்வரனுக்கு எள் முடிச்சு வைத்துத்தான் எண்ணெய் ஊற்ற வேண்டும் என்பதில்லை. சுத்தமான நல்லெண்ணெய் கொண்டே தீபம் ஏற்றுங்கள். நல்லெண்ணெயே எள்ளிலிருந்து எடுக்கக்கூடியது தான், அப்புறம் ஏன் மீண்டும் எள் முடிச்சுப் போடுகிறீர்கள்? அதேபோல கொண்டைக்கடலை மாலை போடுவதும் அப்படித்தான். மனதில் எந்த பாரமும் இல்லாமல், சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் சுவாமியிடம் சென்று வழிபடுங்கள். கண்டிப்பாக அவர் அனுக்கிரகம் செய்வார்.

இப்பொழுது கோவிலில் தேங்காய் உடைக்கக்கூடாது, விளக்கு ஏற்றக்கூடாது என்று எழுதியே வைத்திருக்கிறார்கள். எதைத்தான் வாங்கிட்டு போகலாம்?
நீங்கள் உங்கள் நண்பரை பார்க்க போகிறீர்கள் அல்லது உறவினர்கள் வீட்டுக்கு போகிறீர்கள் என்றால், அவர்களுக்கு பிடித்ததை ஏதேனும் வாங்கிப்போவோம். அதே மாதிரி இறைவனை பார்க்கும்போது வெறும் கையோடு போகக்கூடாது. கற்கண்டு வாங்குங்கள், அது விலை உயர்ந்தது கிடையாது. அதை அங்கே வருபவர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். நாம் கொடுக்கக்கூடிய பொருள் சுவாமியிடமிருந்து பிரசாதமாக நான்கு பேருக்கு போய் சேரும். நம்முடைய தகுதிக்கு ஏற்ப எதையாவது வாங்கிக் கொடுங்கள். ஏதாவது ஒரு பழத்தை சுவாமியிடம் வைத்து நெய்வேத்தியம் பண்ண சொல்லுங்கள். வெற்றிலை பாக்கு கடவுளுக்கும் நமக்கும் இருக்கக்கூடிய உறவை பலப்படுத்தும். எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை பாக்கு வைப்பதற்கான காரணம் அதுதான். அதனால்தான் அது தாம்பூலம் என்ற மங்கள பொருள்.

நாம் அவசரமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முடிந்தளவுக்கு சரியாக செய்யுங்கள். கோவிலில் குடும்பப் பிரச்சனை அல்லது மற்றவர்களை சார்ந்த பிரச்சனைகளை பற்றி பேச வேண்டாம். அமைதிக்காகக் கோவிலுக்கு போகிறோம், அங்கேயும் தற்படம் (Selfie) எடுக்க வேண்டாம். அப்படி செய்தால் வழிபட்டதற்கான பலனே கிடையாது.

கோவிலில் இருக்கப் போகும் ஒரு மணி நேரம் உங்களுக்காக மட்டுமே. வேற எதையும் யோசிக்காதீர்கள், யாரை பற்றியும் பேசாதீர்கள். மனதை அலைபாய விடாமல், சந்தோஷமான முறையில் தெய்வத்தை பார்த்துவிட்டு வரும்போது கண்டிப்பாக நல்லது நடந்தே தீரும். நிறையப் பேர் 'கோவில்களுக்கெல்லாம் போகிறேன் ஆனால் ஒன்றும் பலன் கிடைக்கவில்லை' என்று சொல்வதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.