Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

திருமணம் 26 வயதில் செய்ய கூடாதா?

03 Nov 2026 4 நிமிட வாசிப்பு வீடியோ
முன்பெல்லாம் 26 வயதாகிவிட்டாலே திருமணம் செய்ய் வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது 26 சின்ன வயதாகவே பார்க்கப்படுகிறது. வேலைக்கு சென்று நன்றாக சம்பாதிக்கட்டும், வீடு, வாகனம் வாங்கட்டும் என்ற சூழ்நிலை வந்துவிட்டது. அதனால் 35–40 வயதிலும் கூட திருமணம் ஆகாமல் இருப்பவர்களை பார்க்க முடிகிறது. இவ்வளவு தாமதமான திருமணங்களுக்கு என்ன காரணம்?
இதற்கு ஆன்மீக ரீதியாக, ஜோதிட ரீதியாக பல காரணங்கள் உள்ளன. ராமேஸ்வரம் திருக்கோவிலில் பல சூட்சுமங்களை அறியலாம். இக்கோவிலின் உள்ளே 23 தீர்த்தங்கள் உள்ளன. கடற்கரையோரம் அமைந்திருந்தாலும், தீர்த்தங்களின் தண்ணீர் உவர்ப்பாக (உப்பு கரிக்காமல்) இருக்காது. ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு பாவத்தைப் போக்கக்கூடியது என்பார்கள். கங்கா, யமுனா, சரஸ்வதி போன்ற நதிகளின் பெயரிலும், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் ராமர் தீர்த்தம், மகாலட்சுமி தீர்த்தம் என்றும் பல தீர்த்தங்கள் அங்கு உண்டு.

இந்த கோவிலின் சிற்பக்கலையில் ஒரு விசேஷமான சூட்சுமம் செதுக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்த யுகங்களில் ஒரு ஆண் தான் பெண்ணை சுமந்து செல்வது போன்ற சிற்பங்கள் இருந்தன. ஆனால், இக்கோவிலில் ஒரு பெண் ஆணை சுமந்து செல்வது போன்ற சிற்பம் இருக்கும். காரணம், கலியுகத்தில் பெண்ணின் குணம் ஆணாகவும், ஆணின் குணம் பெண்ணாகவும் வாழக்கூடிய காலம். இன்று பல குடும்பங்களில் பெண்களின் ஆளுமையும், அதிகாரமும் முன்னிலையில் இருப்பதை பார்க்க முடிகிறது.

இன்றைய வாழ்க்கை முறையில், ஆண்களுக்கு 25 வயதில் வேலைக்கு சேர்ந்த உடனே, 28 வயதிலாவது திருமணம் நடக்க வேண்டும் என்று பெண் தேட தொடங்கி விடுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு 35 வயதானாலும், "அவளுக்கு எப்போது விருப்பமோ, எந்த மாப்பிள்ளையை பிடிக்கிறதோ அப்போது திருமணம் செய்யட்டும்" என்று விட்டுவிடுகிறார்கள். இந்த மாற்றத்திற்கு நாம் வாழும் யுகத்தின் தன்மையும், அவர்களுடைய கர்ம வினையும் காரணம்.

நான் நாடி ஜோதிடம் படிக்கும் போது எனக்கே மிகவும் சுவாரசியமான விஷயம் புலப்பட்டது. ஒரு ஆணுக்கு நாடி படிக்கும்போது, அவர் முற்பிறவியில் பெண்ணாக வாழ்ந்ததாக குறிப்பிடுகிறது. அதேபோல். ஒரு பெண்ணுக்கு நாடி படிக்கும்போது, அவர் முற்பிறவியில் ஆணாக வாழ்ந்ததாக கூறுகிறது. பொதுவாக பெண்ணாகப் பிறப்பவர்கள் அடுத்த பிறவியிலும் பெண்ணாகத்தான் பிறப்பார்கள் என்று நினைப்போம். ஆனால், ஆன்மாவிற்கு உருவம் கிடையாது. இப்பிறவியில் பெண்ணாக இருப்பவர்கள் அடுத்த பிறவியில் ஆணாக பிறக்கலாம். இது ஒரு சூட்சும விதி.

முற்பிறவியின் கர்ம பதிவுகள், இப்பிறவியில் சிலருக்கு திருமண பந்தத்தின் மீதே ஆசை இல்லாத நிலையை உருவாகிறது. "நான் ஏன் ஒரு இத்தகைய கடமைகளுக்குள் (Commitment) வர வேண்டும்? ஏன் உடனே திருமணம் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்? என் விருப்பப்படி சுதந்திரமாக வாழ்க்கையை வாழ்கிறேன்" என்று நினைப்பவர்கள் இன்று பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

கர்மா என்பது தலைமுறையாக தொடர்ந்து வரும் விஷயம் தான். நம்முடைய அம்மா, பாட்டி தலைமுறையிலும் கர்மா இருந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் 20 - 23 வயதில் திருமணம் நடந்துவிட்டது. அப்படியிருக்க, இப்போது மட்டும் கர்மாவினால் தான் திருமணம் தாமதமாகிறது என்பதை எப்படி புரிந்து கொள்வது?
அதுதான் விதி் பயன். ஒரு தாய் தன் மகனாலோ அல்லது மகளாலோ பாதிக்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கும். அதேபோல் ஒரு மகன் தன் பெற்றோரால் பாதிக்கப்பட வேண்டும் என்ற விதியும் இருக்கும். இதனை பலருடைய வாழ்க்கையில் பார்க்கிறோம்.

பிள்ளையின் கர்மா மட்டுமல்லாமல், பெற்றோரின் கர்மாவும் அதில் இணைகிறது. "இத்தகைய எண்ண ஓட்டங்கள் அல்லது குறைபாடுகள் கொண்ட பிள்ளை தங்களுக்கு பிறக்க வேண்டும்" என்பது பெற்றோரின் விதியாகவும் இருக்கிறது. இரு கர்ம வினைகளும் இணையும் போதுதான் ஒரு குறிப்பிட்ட ஆன்மா, ஒரு குறிப்பிட்ட தாயின் வயிற்றில் பிறக்க முடியும். எல்லாரும் எல்லார் வயிற்றிலும் பிறந்துவிட முடியாது. பெற்றோர் மற்றும் பிள்ளையின் கர்மாக்கள் இணையும் போதுதான், பிள்ளையால் பெற்றோருக்கு சந்தோஷமாக, யோகமாக அல்லது அவமானங்களும் துன்பங்களும் ஏற்படுமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களின் ஓலைச் சுவடிகளை விரிவாக பார்க்கும்போது ஆழமாக அறிய முடியும்.

ஒருவருடைய ஜாதகத்தை பார்க்கும்போதே 35 வயதில் தான் திருமணம் ஆகும் என்பதை கணிக்க முடியுமா?
நிச்சயமாக, துல்லியமாகக் கணிக்க முடியும். பல ஜாதகங்களை பார்த்து, "இந்தபெண்ணுக்கு 23 வயதில் திருமணம் செய்துவிடுங்கள், இல்லையென்றால் 30 வயது வரை திருமணம் நடக்காது" என்று சொல்லி இருக்கிறோம். அந்த எச்சரிக்கையை ஏற்று சரியான காலத்தில் திருமணம் செய்து நல்லபடியாக பலர் வாழ்கிறார்கள். இடையில் வரும் சிக்கல்களுக்கு உரிய தீர்வுகளை வழங்கியிருக்கிறோம்.

சில ஜாதகங்களில், "தயவுசெய்து 25 வயதில் திருமணம் செய்ய வேண்டாம்" என்றும் அறிவுறுத்துவோம். அதையும் மீறி அவசரத்தில் திருமணம் செய்தால், "திருமணம் ஆகவில்லையே" என்று வருத்தத்தோடு ஜோதிடம் பார்க்க வந்தவர்கள், "வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு என்ன தீர்வு?" என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே, காலநேரம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்க வேண்டும்.

26 வயதில் திருமணம் செய்யக்கூடாது, 27 வயதில் தான் செய்ய வேண்டும் என்று சொல்வது உண்மையா ?
கூட்டுத்தொகை 26 (2+6 = 8) என்று வருவதால், அது சனியின் எண் என்றும், எட்டாம் எண்ணில் திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்காது என்பது ஒரு தவறான கணிப்பு. 26 வயதில் திருமணம் சார்ந்த கிரக அமைப்பு வலுவாக இருந்தால் தாராளமாக திருமணம் செய்யலாம். வாழ்க்கையும் நன்றாக இருக்கும். அதேபோல் 27-ல் திருமணம் செய்தால் உருப்பட மாட்டார்கள் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் 27-ல் திருமணம் செய்து மிக ஆனந்தமாக வாழ்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை எண்களிலேயே மிகவும் சிறந்த, ராசியானது (Lucky Number) 8-ம் எண் தான். ஆனால், நம் நாட்டில் வாகன பதிவின் போது, காசு கொடுத்தாலும் கூட்டுத்தொகை எட்டு வரும்படியான எண்களை தருவதில்லை. அதை தவிர்த்து விடுகிறார்கள்.

மற்ற ஒன்பது எண்களும், 8-ம் எண்ணுக்குள் அடக்கம் என்பதுதான் சூட்சுமம். நீங்கள் Calculator கவனித்தால், திரையில் '8' என்ற வடிவமே அடிப்படையாக இருக்கும். அந்த வடிவத்திற்குள் அனைத்து எண்களையும் கொண்டு வந்துவிடலாம். ஆனால், மற்ற எண்களுக்குள் அனைத்து எண்களையும் கொண்டு வர முடியாது..

ஒரு திரைப்பட பாடலில், "எட்டு எட்டாக மனித வாழ்வைப் பிரித்துக்கொள்..." என்று குறிப்பிட்டிருப்பார். அது கருத்துமிக்க பாடல்.

1 முதல் 8 வயதிற்குள் விளையாடாத விளையாட்டு விளையாட்டல்ல.
8 முதல் 16 வயதிற்குள் படிக்காத படிப்பு படிப்பல்ல.
24 வயதிற்குள் செய்த திருமணம் திருமணமல்ல

இன்றைய தலைமுறையினர் "இன்னும் கொஞ்ச காலம் சுதந்திரமாக வாழலாமே" என்று காலத்தை கடத்துகிறார்கள். வயதான பிறகு, "குழந்தை பிறக்கவில்லை, கணவன் அல்லது மனைவியோடு ஒத்துப் போக முடியவில்லை, எனக்கே வயது வரம்பை (Age Bar) தாண்டிவிட்டது, என்று பல காரணங்களை சொல்கிறார்கள்.

இந்த சூழ்நிலைகளை உருவாக்கியது நாம் தான். நம் வாழ்க்கையை நாமே தன்னிச்சையாக தீர்மானிக்கக் கூடாது. நாம் யாரும் கடவுளோ அல்லது ஞானிகளோ அல்ல. இறைவன் நமக்குக் கொடுத்த வாழ்க்கையை முறைப்படி நாம் சரியாக பயணிக்கிறோமா என்று யோசிப்பது இல்லை. உண்மையான வழிகாட்டிகளை தேர்ந்தெடுத்து, ஆலோசனைகளைப் பெற்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், சுகமான பாதையில் பயணிக்கும் என்பது விதி.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.