Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

கர்ம வினையும், கலைத்துறை கனவும்

04 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியுமா?
எல்லாமே தெரிந்துவிடும். ஆனால், எதைச் சொல்ல வேண்டும், சொல்லக் கூடாது என்ற ஒரு வரைமுறை இருக்கிறது. சிலரிடம் வெளிப்படையாக சொல்லியிருக்கிறோம். உதாரணமாக, 'இது திருமணத்திற்கு முன்னரே கற்பிழந்த ஜாதகம்' என்று சொல்லியிருக்கிறோம். 'நீங்கள் இருவரும் முற்பிறவியிலும் கணவன்-மனைவியாக இருந்துவிட்டு, தாலிகட்டி வாழ்கிறீர்கள்' என்பது சொல்லியிருக்கிறோம்.

தவறான தொழிலில் இருக்கக்கூடியவர்களுக்கு கூட நான் நாடி படித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் மீது நான் தவறான எண்ணத்தில் பார்த்தது கிடையாது. என் மனதை அது சஞ்சலப்படுத்தவில்லை. அவர்கள் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ, இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று புரிந்து அவர்களுக்கு நல்வழிக்கான தீர்வை கொடுத்திருக்கிறேன். எல்லாமே எழுதி வைக்கப்பட்டது தான் நடந்து கொண்டிருக்கிறது.

சிலருக்கு ஓலைச்சுவடி கிடைக்காமலே போய்விடுகிறதே ?
பலருக்கு ஓலைச்சுவடி இல்லாமல் போயிருக்கிறது. நாம் தெரிந்து கொள்வதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மகரிஷியுடைய வாக்கு என்பது எளிது கிடையாது.

நிறைய பெண்கள் Instagram Reels மூலம் சினிமா துறையில் நுழைந்து விட வேண்டும் என்று ஏடாகூடமான விஷயங்களை பண்ணுகிறார்கள். அவர்களின் ஜாதகப்படி சினிமா துறையில் கொண்டு சேர்க்குமா?
சில நாடிகளில், 'போன ஜென்மத்தில் நீங்கள் ஒரு நல்ல குடும்பத்தில், உயர்ந்த குலத்தில் பிறந்து சங்கீதம் நாட்டியத்தின் மீது அதிகமான பற்று கொண்டு, அந்த கலையை முழுமையாகக் கற்று, அதில் நல்லதொரு பேர், புகழின் வருகின்ற பொழுது உங்களுடைய கர்மா, தவறான பாதையில் பாவத்தை செய்ய வைத்தது' என்று வரும். அக்கலையில் முழுமையாக நீடிக்க முடியாமல் பிறவி முடிகிறது.

மீண்டும் இப்பிறவி எடுக்கும் போது, உங்களுக்கு சங்கீதம், கலை மீது ஆர்வம் இருக்கும். இன்றைக்கு பலர் பரதநாட்டியம் கற்றுக் கொண்டு பாதியிலே விட்டிருப்பார்கள். அது அவர்களுக்கு பிரியமானதாக இருந்திருக்கும், ஆனால் சாதிக்க முடிந்திருக்காது. இந்த உதாரணங்கள், சிலருக்கு நாடியில் வந்திருக்கிறது. 'போன ஜென்மத்தில் இப்படி பாவம் செய்ததால், இக்கலை இந்த ஜென்மத்தில் உங்களுக்கு இருந்தும் பயனில்லாமல் போகும். அதற்குள் உங்களால் முழுமையாக போய் சேர முடியாது' என்று வந்திருக்கிறது.

நம்முடைய கர்மவினையை பொறுத்துத்தான் 'நெல் விதைத்தால் நெல்தான் அறுவடை செய்ய முடியும்' என்பது போன்றது.

இந்த பிறவியில் நமக்கு அமையக்கூடிய கிரகமும் கர்மாவை அடிப்படையாக கொண்டே வருகிறது. ஒரு ஜாதகத்தில் 10-ம் இடம் என்பது ஜீவனம் (தொழில்). லக்னமே நம்முடைய குணத்தை நிர்ணயிக்கும். மிதுன லக்னம், கன்னி லக்னம் உள்ளவர்களுக்கு நடிப்பு, நாடகம், கலை, கற்பனை, கவிதை ஆகியவற்றின் மீது பற்று அதிகமாக இருக்கும். ஆணாகப் பிறந்திருந்தாலும் கூட, பரத நாட்டியத்தில் நன்றாக ஜெயிப்பார்கள். அவர்களிடம் மென்மையான பெண் தன்மை கலந்திருக்கும். அந்த இடத்தில் புதன் கிரகம் சம்பந்தப்பட்டிருப்பார். புதன் என்பது அலி கிரகம் என்பதால், ஆணாகப் பிறந்தாலும் கொஞ்சம் பெண்மையை காட்டும். இது ஜோதிடத்திற்குள் ஆழமாக போகக்கூடிய விஷயம்.

'நான் கலைத்துறையில் ஜெயிப்பேனா?' என்பதை 10-ம் இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். திரை துறைக்கென்று சில கிரகங்கள் இருக்கின்றன. நடிப்பதற்கும், வேஷம் போடுவதற்கும் தனித்தனி கிரகங்கள் உள்ளன. தொழில்நுட்பக் கலைஞராக அல்லது நிர்வாகத் துறையில் இருப்பதற்கும் தனித்தனி கிரகங்கள் பிரிக்கப்படுகிறது.

அதனுடைய சாராம்சங்கள் வலுவாக இருந்து, அதற்கான தசா காலங்கள் நடந்தால், reels எல்லாம் போட வேண்டியது இல்லை. சாலையோரமாக இருந்தவரை ஒரு பாட்டு பாட வைத்து உச்சிக்கு வந்திருக்கிறார்கள். தன்னை அழகுபடுத்தி காட்டுவதை விட, அழகே இல்லாதவர்களை, அவர்களுடைய யோக காலம், தசா காலங்கள் வரும்போது அந்த கிரகங்கள் செயல்பட (Activate) தொடங்கி, உலக புகழுக்கு கொண்டு போய்விடுகின்றன. 'பறவை முனியம்மா' அவர்கள் எந்த வயதில் சினிமா துறைக்கு வந்து புகழடைந்தார் ?

திரை துறையில் ஜெயிப்பதற்கும், உள்ளே வருவதற்கும் இப்படித்தான் நம் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கான கிரகங்கள் சாதகமாக இருந்தால், யாராவது ஒருவருடைய தூண்டுதல் மூலமாக உள்ளே கொண்டு வந்து விட்டுவிடுவார்கள்.

இன்றைய தேதியில் இரு பெரும் நட்சத்திரங்களாக விஜய் மற்றும் அஜித் குமார் இருக்கிறார்கள். விஜய் குடும்பமே திரை துறையில் இருக்கும் பாரம்பரிய குடும்பம். அப்பா இயக்குனர், அம்மா நல்ல பாடகி. எனவே, அந்த மரபணு (Gene) மூலமாக தானாக திரைத் துறைக்கு நடிக்க வந்துவிட்டார். ஆனால், அஜித் குமார் பின்னணி ஒன்றுமில்லை, இன்றைக்கு உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவர் என்ன விளம்பரம் செய்தார் ? இன்றைக்கு அவர் நடிக்க கூடத் தேவையில்லை, வெளியில் வந்து நின்றாலே போதும்.

அவர்களுடைய ஜாதகத்தில் அந்த கிரகம் பலம் பெற்று, அதனுடைய தசை மற்றும் சாராம்சம் நன்றாக இருந்திருக்கிறது. லக்னாதிபதி, 4-ம் அதிபதி, 10-ம் அதிபதி வலுவாக இருந்து சம்பந்தப்பட்ட கிரகங்கள் செயல்படும் போது, புகழின் உச்சத்திற்கு போவதை யாராலும் தடுக்க முடியாது.

ஆகையால், reels போன்ற முயற்சிகள் வேண்டாம். உங்கள் தலையெழுத்தில் இருப்பதுதான் நடக்கப் போகிறது. மரத்தில் ஒரு காய் காய்த்து, பழமாக மாறும் போது, தன்னாலேயே கீழே விழுந்து விடுகிறது. நாம் பறிக்க வேண்டியதில்லை.

இந்த உதாரணம் திரை துறைக்கு மட்டுமல்ல. ஆன்மீகம், மகிழ்ச்சி, தொழில் என எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். நல்ல காலம் வரும்போது தானாகவே நம்மை கொண்டு சேர்க்கும். அந்த நேரத்தில் நாம் போகும் பாதை சரியானதா என்பதை நிதானமாக பார்த்து கொள்ள வேண்டும். உங்களுடைய நேர கால பலன்களை நாடி ஜோதிடம் மூலம் அறிந்து, பின்பற்றினால் வெற்றி அடைந்துவிடலாம்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.