நாடி சாஸ்திரத்தை நம்புகிறார்களோ இல்லையோ, அதில் பயணம் செய்கின்ற எனக்கு அதன் உண்மை தெரிகிறது. பரிகாரங்கள் என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். இதுவரை நான் பரிகாரம் செய்ய வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தியது கிடையாது.
மகரிஷிகள், "வாழ்க்கையில் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். இடையில் சில வருத்தங்களும் இருக்கும்" என்றுதான் எழுதியுள்ளனர். அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு கவசம்தான் பரிகாரம்.
ஒரு கஷ்டத்தில் இருக்கும்போது கோயிலுக்கு போகிறோம். சுவாமிக்கு அபிஷேகம் பண்ணினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நினைத்து செய்கிறோம். அந்த பூஜை பண்ணியவுடனே பலன் கிடைத்துவிட்டதா? பலன் கிடைக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். அதற்காக திரும்பி கோயிலுக்கு போகாமல் இருக்கிறீர்களா?
எத்தனை பேர் நம்மை திட்டியிருக்கிறார்கள், வாழ்த்தியிருக்கிறார்கள் என்பது தெரியாது. அவை அனைத்துமே நமக்குள்ளே கர்மவினையாக சேர்கின்றன. அதை நிவர்த்தி பண்ண, அதற்குரிய கோயிலுக்கு போயிட்டு வரச் சொல்லுவோம். அதை ஆத்மார்த்தமாக பண்ணும்போது கண்டிப்பாக தெய்வத்தின் அனுக்கிரகம் உண்டு. ஓலைச்சுவடியில் எழுதப்பட்டது சாதாரண விஷயம் கிடையாது. அது மகரிஷியுடைய வேத வாக்கு.
நாடி படிக்கும்போது, முன்கூட்டியே கணித்து, அவர்களை பாதுகாத்த போன்ற ஏதேனும் நிகழ்வுகள் நடந்திருக்கின்றனவா ?
நரம்பு மற்றும் வாதப் பிரச்சினை - ஒரு கை அல்லது ஒரு கால் செயலிழக்கக்கூடிய நேரம் வரும் என்பதைச் சொல்லியிருந்தோம். அவர்கள் 'உடற்பயிற்சி மையத்திற்கு (gym) போகிறேன், சரியாக நடைப்பயிற்சி செய்கிறேன், உடம்பை கட்டுக்கோப்பாக (Fit) வைத்திருக்கிறேன்' என்பார்கள். ஆனால், திடீரென்று ஒரு நாள் மயக்கம் வந்து கீழே விழுந்துவிடுகிறார்கள். மருத்துவமனைக்கு கொண்டு போவதற்குள் ஒரு கை, கால் மடங்கிவிடுகிறது. காலுக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கும் போதுதான், குடும்பத்தினர் நம்மை தொடர்புகொள்கிறார்கள். நீங்கள் அன்றைக்கே சொன்னீர்கள், ஆனால் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்பொழுது இந்த சூழ்நிலையில் "எப்படிப் காப்பாற்றுவது, என்ன பரிகாரம்?' என்று கேட்கிறார்கள்.
வெள்ளம் வருவதற்கு முன் அணை போட வேண்டும். தண்ணீர் ஓடும்போது, அதை தடுக்க முடியாது. அதுதான் வாழ்க்கை. சில விஷயங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்குக் கடவுள் கொடுத்த நேரத்தை அவர்கள் தவறவிடுகிறார்கள். மகரிஷி முன்னாடியே அறிவித்துவிட்டார், ஆனால் கவனக்குறைவாக இருந்துவிட்டோம், முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இப்பொழுது விதியை மீறி அவர்கள் அனுபவிக்க வேண்டிய சூழலை தங்களின் அலட்சியத்தினாலே உருவாக்கி கொள்கிறார்கள்.
உடலில் உள்ள சுரப்பிகள் இன்சுலின், தைராய்டு போன்றவற்றை நாடி சுட்டிக்காட்டுகிறது. புற்றுநோயை பற்றி ரத்தத்தில் மாசு, இன்சுலின் சுரப்பிகளில் பாதிப்பு என்றார்கள். எங்களுக்கு அது முதலில் புரியவில்லை, பொதுவாக தைராய்டு மாதிரி சொன்னோம். ஆனால் அவர்களுக்கு இருந்தது ரத்தப் புற்றுநோய். இன்னைக்கும் அவர்கள் டயாலிசிஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இது வாழ்க்கையில் வரும் என்பதை அவர்கள் முன்கூட்டியே உணர்ந்ததே இல்லை. அதற்கான அறிகுறியே இல்லாமல் உடம்பு சுறுசுறுப்பாக இருந்தது.
சில நேரங்களில் அப்பா, அம்மா என்று குழந்தையை அழைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் நாடியில், 'நீ இந்த குழந்தைக்கு அப்பா அல்லது அம்மா இல்லை' என்று வரும்போது கலங்கிவிடுவார்கள். 'ஐயோ, என் குழந்தைக்கு இதுவரை தெரியாது, அதை நீங்கள் சொல்லிவிடாதீர்கள்' என்று வருத்தப்பட்டவர்களும் உண்டு. சில விஷயங்களை தெரிந்தும் சொல்ல முடியாமல் இருக்கிறது. கணவன் மனைவியாக நல்லபடியாக வாழ்ந்திருப்பார்கள், ஆனால் பின்னால் ஒரு மறைமுக வாழ்க்கை இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். அதை சொல்ல முடியாது.
விருப்பப்பட்டு தவறுகள் பண்ணியிருந்தாலும், அதன்பின் மன உளைச்சலாக இருக்கும். அதிலிருந்து அவர்களை மீட்டுக்கொண்டு வந்திருக்கிறோம். எப்போது ஒருவர் தனது நிலையை உணர்ந்து 'நான் செய்தது தவறு' என்று சொல்லும்போதே அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள். கடவுளே அவர்களை மன்னித்துவிட்டார் என்றுதான் அர்த்தம். அது ஒரு சூட்சமம்.
வழக்கு சார்ந்த விஷயங்கள், நீதிமன்ற பிரச்சினைகளில் இருந்து வெளிவர முடியாதவர்களை காப்பாற்றி கொண்டு வந்திருக்கிறோம். நியாயமான கோரிக்கைகளுக்காகவும், தப்பு பண்ணாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டவர்களுக்காக ஏராளமாக செய்திருக்கிறோம். பூஜை பண்ணிட்டு வெளியே வந்தவுடனேயே அவர்களுக்கு நல்ல முடிவு கிடைத்திருக்கிறது.
மருத்துவர்களால் குழந்தையே பிறக்காது என்று சொல்லப்பட்டவர்களுக்கு கடவுளின் அனுக்கிரகத்தினால் குழந்தை பாக்கியம் கிடைத்தது ஆச்சரியமான விஷயம். 14 வருடங்கள் கழித்து குழந்தை பெற்றவர்கள் இருக்கிறார்கள். இது ஜோதிடத்திற்கு அப்பாற்பட்டு நடக்கக்கூடிய விஷயம். 'நிறைய ஜோதிடர்களிடம் பார்த்துவிட்டேன், சொன்னது நடக்கவில்லை. கடைசியாக உங்கள் முயற்சியில், குருநாதரின் அனுக்கிரகத்தின் மூலமாக ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பி வந்திருக்கிறோம்' என்பார்கள். அப்படி வந்து பலன் அடைந்தவர்கள் பலர் உண்டு.
நானே சில நேரம் நினைப்பேன், 'எல்லோருமே எல்லா இடத்திலும் இழந்துவிட்டு, கடைசியாக நம்மிடம் வந்து நிற்கிறார்களே' என்று வருந்தியிருக்கிறேன். நம்மை தேடி வரவில்லை. குருநாதர் தான் நம்மிடம் அனுப்பி வைத்திருக்கிறார். அவர்களுக்கு நம்மால் நல்லது நடந்தால் சந்தோஷம் என்று நினைத்து அந்த வேலையை எடுப்போம். நிறைய இடங்களில் இழந்துவிட்டு நம்மிடம் வந்து நிறைய கேள்வி கேட்பது தான் கொடுமையாக இருக்கும். பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அவர்கள் இருந்தாலும், நம்மை கேள்வி கேட்பார்கள். ஆனாலும் அவர்களுடைய வலி மற்றும் கஷ்டம் அவர்களை பேச வைக்கிறது என்பதை புரிந்து கொண்டு, அவர்களுக்கு தெளிவுபடப் புரிய வைப்போம். என் மேல் நம்பிக்கை வைத்து வந்து, கடைசி முயற்சியாக பரிகாரம் செய்து நற்பலன் அடைந்தவர்கள் பலர்..
ॐ