நாடி ஜோதிடம் என்றால் என்ன ?
நாடி ஜோதிடம் என்பது பழங்காலத்தில் வாழ்ந்த மகரிஷிகள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சித்தர்களால் அருளப்பட்டது. சித்தர்கள் என்றால் 18 பேரைக் குறிப்பிடுவோம். ரிஷிகள் என்றால் ஒரு 7 பேரைக் குறிப்பிடுவோம் (சப்தரிஷிகள்). தெய்வங்களுக்கு அடுத்தபடியாக ரிஷிகளையும், அவர்களுக்கு அடுத்தபடியாகச் சித்தர்களையும், சித்தர்களுக்கு அடுத்தபடியாக மகான்களையும் வரிசைப்படுத்துவோம்.
இவர்கள் அனைவரும் இறைவனுக்கு நிகராக இருக்கக்கூடியவர்கள். இறைவனாகவே இருப்பவர்கள். இறைவனுடைய மறு உருவமாக நம்மிடையே வாழ்ந்தவர்கள். நம்மைப் போன்ற மனிதர்களின் வாழ்க்கையை செப்பனிட மூல காரணமாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சித்தர்களும், மகரிஷிகளும் தங்களுடைய 'ஞான திருஷ்டி' மூலம் பிரம்ம ஞானத்தைப் பெற்று விளங்கினார்கள். படைக்கும் கடவுளான பிரம்மனிடம் முழுமையாக ஞானம் பெற்றவர்களைப் 'பிரம்மரிஷி' என்று சொல்வோம். அந்த வரிசையில் சுகர் பிரம்ம ரிஷி போன்றவர்கள் வருகிறார்கள். அடுத்து பிறக்க இருக்கின்ற மனிதர்கள், இந்தப் பிரபஞ்சத்தில் எப்படி வாழப் போகிறார்கள் என்கிற ஞானம் அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கப் பெற்று, அவர்களால் நமக்காகக் கொடுக்கப்பட்டதுதான் நாடி ஜோதிடம்.
அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏதேனும் இருக்கிறதா ?
சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு நாடி ஜோதிடமே ஒரு மூலப்பொருளாக (ஆதாரமாக) இருந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதைத் தாண்டி, இன்றைக்கும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அது நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குப் புலப்படாது. யாரெல்லாம் அவர்களைத் தங்களின் ஆத்மார்த்தமான குருவாக ஏற்று வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களால் அதை முழுமையாக உணர முடியும்.
நாங்கள் எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும், "ஓம் அகத்தீசாய நமஹ", "ஓம் சுகபிரம்ம ரிஷி", "பிருகு ரிஷி" ஆகிய நாமங்களை நாள்தோறும் மந்திரமாக உச்சரிப்போம். அப்பொழுது அவர்களின் அனுக்கிரகம் எங்களுக்குக் கிடைக்கப் பெற்று, எங்களைப் போன்றவர்கள் மூலமாக வரக்கூடியவர்களின் வாழ்க்கையைச் சொல்லுகின்ற பொழுது, அது உங்களுக்குச் சரியான வழிகாட்டுதலாக அமைகிறது. அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள், அவர்களின் வாக்கு இன்னமும் நம்முடைய வாழ்வாதாரத்திற்குத் துணையாக இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு அடையாளம்.
ஒவ்வொரு பழமையான கோவிலில் 'ஜீவ சமாதிகள்' இருக்கும். சிதம்பரம் என்றாலே நடராஜர் கோவில் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த நடராஜர் கோவிலின் சூட்சுமம் என்பது பதஞ்சலி மகரிஷி ஜீவசமாதி அடைந்த இடமாகும். அதேபோலத் திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருத்தலம் என்பது மிகப்பெரிய கோவில். இறைவன் அங்கு ராஜ ரூபமாக எழுந்தருளியிருக்கும் இடம். அந்த இடத்தில் கமலமுனி சித்தர் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்.
இதுபோல 2000, 5000 ஆண்டுகள் பழமையான சிவாலயங்களில், சித்தர்கள் ஜீவசமாதி அடைந்ததற்கான கல்வெட்டுகளும் ஆதாரங்களும் நிறையவே உண்டு. எனவே, அவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஆதாரப்பூர்வமாக இருக்கின்றன.
63 நாயன்மார்களுக்கும், நாடி ஜோதிட விஷயங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
ஆனால், அவர்கள் மனிதர்களாகப் பிறந்து, மனிதர்களாகவே வாழ்ந்து, சிவபெருமானின் தீவிர பக்தியால் 'சிவஞானம்' அடைந்தவர்கள். அப்பர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்றவர்களைச் சொல்கிறோம். இந்தத் கலியுகத்தில் நமக்கு இறைவனின் நேரடிக் காட்சி கிடைக்கவில்லை என்ற பொழுது, அவர்கள் வாழ்ந்த யுகங்களில் இறைவனை நேரடியாகத் தரிசித்து, காட்சி கொடுத்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அதைப்பார்த்து நமக்கே ஒரு ஆச்சரியமும் (பொறாமையும்) கலந்த நிலை உண்டாகும். ஆனால், நாடி ஜோதிடத்திற்கும் நாயன்மார்களுக்கும் நேரடிச் சம்பந்தம் கிடையாது. இது முழுக்க ரிஷிகளுக்கும் சித்தர்களுக்கும் உள்ள தொடர்பே தவிர, நாயன்மார்களுக்கு இதில் பங்கில்லை.
பல வகையான ஜோதிட முறைகளில், நாடி ஜோதிடம் எந்த விதத்தில் வேறுபடுகிறது? இதன் தனிச்சிறப்பு என்ன ?
எல்லா ஜோதிட முறைகளும் நல்ல ஜோதிடம் தான். எதையும் குறை சொல்ல முடியாது. நாங்களும் பரம்பரையாக ஜோதிடக் குலத்தில்தான் பிறந்திருக்கிறோம். நான் இந்தத் தொழிலுக்குப் புதிதாக வரவில்லை, புதிதாகக் கற்றுக்கொண்டு செய்யவில்லை. எங்களுடைய முன்னோர்களும் நாடிப் படித்திருக்கிறார்கள். கணிதவியல் ஜோதிடத்தையும் கையாண்டிருக்கிறார்கள்..
ஒரு குழந்தைப் பிறந்த நேரக் குறிப்புகளைக் கொண்டு வருவார்கள். அதற்குரிய நாழிகைகளைக் கணக்கிட்டு, கிரக அமைப்புகளை ஆராய்ந்து, "இந்தக் குழந்தை இப்படித்தான் வாழும், இவ்வளவு காலம் வாழும்" என்பதையெல்லாம் ஆரம்பத்தில் எழுதித் கொடுத்தார்கள். இப்பொழுது எல்லாம் கணினிமயம் ஆகிவிட்டது. பிறந்த தேதி, பிறந்த நேரம் ஆகியவற்றைப் பதிவு செய்தால் துல்லியமாக வந்துவிடுகிறது. ஆனால், கணினி என்பது நம்முடைய அறிவால் உருவாக்கப்பட்ட மென்பொருள் தான். எங்களுடைய பெரியவர்கள் ஜாதகத்தைக் கணிக்கின்ற பொழுது, மனிதனுடைய ஆதி அந்தங்கள் அனைத்தையும் எழுதுவார்கள். இப்பொழுது அப்படி யாரும் எழுதுவது கிடையாது.
மற்ற ஜோதிட முறைகளோடு நாடி ஜோதிடத்தை ஒப்பிடக் கூடாது. ஏனென்றால், இது முழுக்க அகத்தியர், சிவவாக்கியர் போன்றவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
பழங்காலத்தில் எழுதிய ஜோதிடம், இப்பொழுது நவீன காலத்திற்கும் எப்படி பொருந்திப் போகிறது?
மகரிஷிகள் சொல்வது, நாம் மனிதனாகப் பிறந்துவிட்டோம், ஆயுள் காலம் என்பது பிறக்கும் பொழுதே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், ஆயுட்காலம் முழுவதையும் நாம் வாழ்ந்து முடிப்போமா என்பது தெரிவதில்லை.
ஒரு மனிதனுடைய ஆயுள் காலம் 80 வயது என்றால், இடைப்பட்ட காலகட்டத்தில் கண்டங்கள் வரலாம். அதற்கு கிரகச்சாரங்கள் (கிரகங்களின் சுழற்சி) காரணமாக இருக்கின்றன. ஏழரைச் சனி அல்லது மாரகாதிபதி திசைகள் நடக்கும் போதோ, கவனமாக இருக்க வேண்டும். கண்டங்கள் காலகட்டத்தைக் கடந்து, 80 வயது வரை வாழ்ந்து முடித்தால் அது ஒரு சாதனைதான்.
மகரிஷிகள் முதன்மையாகக் குறிப்பிடுவது, மனிதனாகப் பிறப்பதற்குக் காரணமே நம்முடைய 'கர்மவினை' தான். என்னுடைய அனுபவத்தில், கோடீஸ்வரர்களாக இருந்தாலும் அல்லது எளிய மனிதர்களாக இருந்தாலும் அல்லது நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே யாருமில்லை. எல்லாரும் தங்களின் தகுதிக்கு ஏற்ப ஏதோ ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
மகரிஷி, "உன்னுடைய கர்மவினைப்படிதான் நீ இந்தப் பிறவியை எடுக்கிறாய்" என்கிறார். கர்மாவை அடிப்படையாக, முன்பிறப்பிற்கும் இந்தப் பிறப்பிற்கும் உள்ள தொடர்பை இணைக்கிறார்கள்.
மகரிஷி, ஆன்மாவைப் பற்றி, "உடலுக்குத்தான் அழிவு உண்டு, ஆன்மாவிற்கு அழிவு கிடையாது" என்கிறார். மனிதன் இறந்த பிறகு உடலை எரித்துவிடுகிறோம் அல்லது புதைத்துவிடுகிறோம். ஆனால், உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா எங்குப் போகிறது என்பதை யாரும் ஆராய்வதில்லை. இன்றைக்குக்கூட, "யார் தவறுகள் செய்தாலும் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார், அத்தனையும் கணக்கில் எழுதப்பட்டுத் தான் இருக்கிறது" என்று சொல்கிறோம். அதேபோல நம்முடைய முந்தைய பிறவிகளின் கர்மாவை அடிப்படையாகக் கொண்டுதான், இந்த ஜென்மத்தில் நமக்கானது எழுதப்பட்டிருக்கின்றன.
நாடி ஜோதிடத்தில், 'கர்மா' என்பது பெரிய பங்கைக் கொண்டிருக்கிறது என புரிகிறது. அப்படியென்றால், 'கர்மா' 'விதி' என்ன வித்தியாசம் ?
கர்மாவோடு விதியை நேரடியாக இணைக்க முடியாது. கர்மா என்பது வேறு, நம்முடைய விதிப்பலன் என்பது வேறு. நம்முடைய நேரம் நன்றாக அமைவதற்குக் விதிப்பலன் வேண்டும். அந்த விதிப்பலன், நம்முடைய கர்மாவோடுதான் பயணிக்கிறது.
"உன் தலைவிதியை நீ அனுபவிக்கிறாய்" என்று சொல்கிறோம். "விதியை மதியால் வெல்லலாம்" என்கிறோம். நம்முடைய புத்தியையும் அறிவையும் கொண்டு, விதியை வெல்ல முடியும் என்று சொல்வார்கள். ஆனால், அந்த விதியை மதியால் வெல்வதற்கும் 'விதி' இருக்க வேண்டும். அந்த விதிதான் நம்முடைய 'கர்மா'.
ॐ