Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

தீர்க்க முடியாத பிரச்சனையே இல்லை

05 Nov 2026 5 நிமிட வாசிப்பு வீடியோ
எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ, இப்போது துன்பப்படுகிறேன், என்னவென்றே தெரியவில்லை" என்று வருத்தப்படுவார்கள். நாடி ஜோதிடத்தில் இதற்கான தீர்வினை, பரிகாரத்தையும் தெரிந்துகொள்ள முடியுமா?
நாடி ஜோதிடத்தினுடைய சூட்சமம் என்பது, மனிதனாக பிறப்பதற்கு காரணமே கர்மாதான். "வசதியான குடும்பத்தில் பிறந்துவிட்டோம், மிக செல்வாக்காக வளர்கிறோம்" என்று நாம் நினைத்து மிகைப்படுத்தி கொண்டிருக்கிறோம். அதற்கும் கர்மாதான் காரணம்.

ஒரு குழந்தை பிறக்கும் பொழுதே அதன் பாவ புண்ணியத்தினுடைய பலன்கள், பூர்வ ஜென்ம கர்மா அடிப்படையாக ஜாதகம் அமைகிறது. ஜாதகம் என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. லக்னத்தில் ராகு, லக்னத்திற்கு 2-ல் ராகு இருந்தால், அதற்கு அவனுடைய கர்மாதான் காரணம். கர்ம பலன் இல்லாத பிறவி கிடையாது. ஜோதிடர்களால் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை, நாடி ஜோதிடத்தில் மகரிஷியினுடைய வழிகாட்டுதலின்படி, அதிலிருந்து விலகிக் கொள்ளலாம் .

அதாவது, உங்களை நம்பி வரக்கூடாது. அப்படித்தானே?
ஆமாம், என்னை நம்பி வராதீர்கள். அகத்தியரை மனதார நம்பி வேண்டிக்கொண்டு, அவரை நம்பி இங்கே வாருங்கள். உங்களுக்கான தீர்வு கண்டிப்பாக கிடைக்கும். பெரியவர்கள் சொல்லியிருப்பது, "ஜோதிடம் பொய் அல்ல, உரைப்பவன் பொய்" .

இதனை யாரும் எளிதாக ஒத்துக்கொள்ள மாட்டார்களே ?
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஜோதிடருக்கு கர்வமும் இருக்கக்கூடாது. நான் திரும்பப் பதியும் கருத்து என்னவென்றால், நான் கடவுள் கிடையாது.

ஒரு ஜோதிடன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில சூட்சுமங்கள் இருக்கின்றன. எல்லாரும் ஜோசியம் சொன்னால் பலிக்காது. ஜோதிடருக்கு கலைமகளின் அருள் வேண்டும். நாவில் சரஸ்வதி தேவி அமர வேண்டும். ஜோதிடத்தில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றிருக்கலாம். ஆனால், நீங்கள் சொல்வது நடக்காது. ஒரு மாணவன் இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த அம்சங்கள் இருக்கிறவன்தான் ஜோதிடன் ஆக வேண்டும் என்ற விதி இருக்கிறது.

நாடி ஜோதிடத்தை மகரிஷி அகத்தியரும், புலிப்பாணி தேவரும் எப்படி எழுதித் தந்திருப்பார்கள் என்று நீங்கள் யோசித்துண்டா ?
இன்றைக்கும் நான் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டு தான் இருக்கிறேன். "பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஓலைச்சுவடி, இன்றைக்கு பிறக்கக்கூடிய குழந்தைக்கு எப்படி பொருந்துகிறது?" என்ற கேள்வி எனக்கும் எழும். பிரம்மாவை படைக்கும் கடவுள் என்கிறோம். பிரபஞ்சத்தை இயக்குவது இயற்கைதான். இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறவி எடுக்கிறோம். பிரம்மா நம்மை படைக்கிறார்.

பிரம்மா நம்மைக் படைக்கும் பொழுது, நம்முடைய பூர்வ ஜென்ம கர்மாவினுடைய ஒரு பிடியை வைத்துத்தான் படைக்கிறார். நமக்கான முழு சுதந்திரத்தை கொடுத்துவிடுகிறார். "நீ போய் உன் இஷ்டப்படி வாழு. உன்னுடைய கர்மாவினால் தான் நீ இந்த பிறவியை எடுத்திருக்கிறாய். எனவே, உன் கர்மாவையெல்லாம் நிவர்த்தி செய்துவிட்டு, நல்லபடியாக மீண்டும் இறைவனிடமே வந்து சேர்" என்கிற ஒரு நல்ல நோக்கத்தில் பிரம்மா படைத்துவிடுகிறார். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பதற்காக, "எப்படி வேண்டுமானாலும் வாழலாம்" என்று மாறிவிடுகிறோம்.

வெளியுலகில் நடக்கும் சில இரக்கமற்ற செயல்களை பார்க்கும் பொழுது, "எப்படி இவர்களால் இரக்கமில்லாமல் நடத்த முடிகிறது? 'என்னிடம் அதிகாரம், துணிச்சல் இருக்கிறது, அதனால் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்கிறார்கள். அதனால்தான் மகரிஷிகள் சொல்லியிருப்பது, "நம்மை படைத்த பிரம்மன், கர்மாவை நிவர்த்தி செய்துவிட்டு வா" என்றுதான் சொன்னார். ஆனால், நாம் மேலும் கர்மாவையே சேர்த்துக் கொண்டிருக்கிறோம்" என்பதை உணர்ந்தவர்கள் மகரிஷிகள்.

நாடி ஜோதிடத்தில் வருடப் பலன் சொல்ல முடியுமா?
கட்டாயமாக நம் நாட்டுக்காக எழுதப்பட்ட பொதுப் பலன்கள் இருக்கின்றன. இயற்கையினுடைய நிலை, நாட்டினுடைய நிலை, மக்கள் பிரதிநிதியினுடைய நிலை, ஆளுமையினுடைய நிலை என்ன என்பவற்றை சொல்ல முடியும். ஆனால், அதனை சொல்வதற்கான அதிகாரத்தில் நாம் இல்லை. மகரிஷி உத்தரவை கொடுக்க வேண்டும். அதனை ஏற்றுக்கொள்கின்ற இடத்தில் நிர்வாகம் இருக்க வேண்டும்.

இயற்கை சீற்றங்கள் வந்தன. கொரோனா என்ற நோய் வந்தது. அதற்கும் கர்மாதான் காரணம். ஏன்னென்றால், இந்தப் பிரபஞ்சத்தில் கர்மாவினுடைய நிலை ஓங்கிப் போகும் பொழுது, இயற்கையோடு பயணிக்கும் நாமும் அதன் பாதிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. "இயற்கை சீற்றங்கள் குறைந்துவிடும், இதனுடைய வலிமை இருக்காது" என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல, வயநாடு மலை நிலச்சரிவு மற்றும் சில மலைப் பகுதிகளில் ஏற்படும் மண் சரிவுகள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. நீரினுடைய சீற்றங்கள் அதிகமாவது, காற்றாற்று வெள்ளம், சுனாமி போன்றவை சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதனை நாமும் வெளிப்படுத்தியிருக்கிறோம்.

பொதுவான ராசி பலன்கள் பற்றி உங்களுடைய கருத்து என்ன ?
ஒன்பது கிரகங்களை அடிப்படையாகக் கொண்டுதான் பிறப்பு ஜாதகம் அமைகிறது. இந்த ஒன்பது கிரகங்களும் எல்லாருக்குமே நல்லவைகளாக, கெட்டவைகளாகவும் இருப்பதில்லை. ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்திற்கு சனிக் கிரகம் 'யோகாதிபதியாக' விளங்குகிறான். அதே துலாம் லக்னத்திற்கு குரு பகவான் 'பாதகாதிபதியாக' இருக்கிறான். மேஷ ராசிக்கு புதன் பாதகாதிபதியாக இருக்கிறான்.

சிலருக்கு சுக்கிர திசை நடக்கும் போது வாழ்க்கை மிக உன்னதமாக இருக்கும். அதே சனி திசை வரும் போது கஷ்டத்தை கொடுக்கும். ஒருவருடைய கிரக நிலையை ஆராய்ந்து, அதற்கான பதில் நாடியிலும், ஜாதகத்திலும் இருக்கிறது. கர்மாவிற்குள் தான் ஜாதக கிரக நிலைகளும் கட்டுப்பட்டிருப்பதனால், மகரிஷி அதற்குரிய பதிலை கட்டாயம் கொடுப்பார்.

நாடி ஜோசியத்தை எப்படி துல்லியமாக எழுதி இருக்க முடியும் ?
பிரம்மா நம்மை படைக்கும் பொழுது, "உன்னுடைய கர்ம வினையை நீக்கி, திரும்ப இறைவனிடம் நல்லபடியாக வா" என்ற நல்ல எண்ணத்தில் படைக்கிறார். ஆனால், நாம் நல்வழியில் பயன்படுத்தாமல், மேலும் பாவங்களை மலைபோல சேர்த்துக் கொண்டே போகிறோம்.

"எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பாவங்கள் ஏற்படும்" என்பதை உணர்ந்ததால்தான் மகரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார். அதனை உணர்ந்து எழுதும் போது, "இந்த இயற்கை இன்னும் பாதிக்கப்படக் கூடாது. இந்த உலகம் மேலும் சீரழியக் கூடாது. நீ எதற்காகப் பிறவி எடுத்தாயோ, அந்த வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்து உன்னுடைய முக்தியை, ஞான நிலையை பெற்றுக்கொள்" என்பதே. எல்லாராலும் நாடி ஜோசியம் பார்த்துவிட முடியாது. அதற்கு அவரின் அருளும் வேண்டும்.

மகரிஷிகள் நமக்கு ஓலைச்சுவடி மூலமாக கருத்துக்களை கொடுத்ததற்கான காரணமே, உலகம் நன்றாக இருக்க வேண்டும், இயற்கை செழிக்க வேண்டும், மக்கள் மேலும் பாவங்களை சேர்க்கக் கூடாது, நிறைய தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும், புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும், உன்னுடைய பிறவிப் பயணத்தை நீ நல்லபடியாக முடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்..

நாடி ஜோசியத்தை மக்கள் தேடி வந்து பார்க்கக்கூடிய உன்னதமான காலகட்டம் வருமா ?
எந்த வயதில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அப்போது அந்த இடத்திற்கு தேடிப் போய்விடுவீர்கள். "உங்களுடைய பலாபலன்களை நீங்கள் இந்த வயதில், இந்த காரணத்திற்காக வந்து தெரிந்துகொள்வீர்கள்" என்று மகரிஷி கொடுத்திருக்கிறார்..

நாம் எதற்கெடுத்தாலும் 'பிரச்சினை' என்கிறோம். "நீ போய் உன்னுடைய கர்மாவை பற்றி தெரிந்துகொள்" என்பதற்காக தான் பிரச்சினைகள் ஒரு தூண்டுகோலாக அமைகின்றன. சிலர் குடும்ப வாழ்க்கையில் அல்லது நீதிமன்ற வழக்கு சார்ந்த பெரிய பிரச்சினைகளில் இருப்பார்கள். அவர்களுக்கு நாடி ஜோசியம் என்றால் என்னவென்றே தெரிந்திருக்காது. "எப்படித்தான் பிரச்சினையை தீர்ப்பது?" என்ற போதுதான், "நாடி ஜோசியம் என்று ஒன்று இருக்கிறதே," என்ற எண்ணம் அவர்களுக்குள் தோன்றும். உடனே அவர்களுடைய நாடியை எடுத்துப் படிக்கும் பொழுது, "உன்னுடைய கர்ம வினை இதுதான், நீ செய்த பாவம் இவ்வளவு இருக்கிறது, அதனைத்தான் நீ சுமந்து கொண்டிருக்கிறாய்" என்று வரும்.

கணவன், மனைவி இடையே பிரச்சினை இருக்கிறது. ஆனால் சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்கள் உங்களிடம் வரும் போது, "பிரிய வேண்டும்" என்ற விதி ஓலையில் இருந்தால், அதனை நீங்கள் அவர்களிடம் சொல்லிவிடுவீர்களா?
சொல்லியிருக்கிறேன். ஓலையில் உள்ளதை உள்ளபடி கட்டாயம் சொல்லத்தான் வேண்டும். அதனை நாம் மாற்றிப் பேச முடியாது. நாம் யாரையும் பிரிக்கவில்லை. "இந்த ஜென்மத்தில் இவர்தான் உங்களுக்கு மனைவியாக அல்லது கணவனாக வர வேண்டும்" என்று எழுதப்பட்ட விதியை மாற்றி அமைக்கும் போது, அதுவே கர்மாவாக மாறுகிறது.

விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டாலும், சந்தோஷமாக வாழ்கிறார்களா? எத்தனை பேர் உள்ளுணர்ந்த காதலோடு வாழ்கிறார்கள்? பணம் இருந்தால் மனைவி நல்லபடியாக கவனிக்கிறார், இல்லையென்றால் பிரச்சினையை உருவாக்குகிறார்.

எனவே, காதல், அன்பு என்பது உண்மையாக, எல்லா சூழ்நிலைகளிலும் இருக்க வேண்டும். அப்படி எத்தனை குடும்பங்களில் இருக்கிறது?. எல்லாவற்றிற்கும் கர்மாதான் காரணம். நாம் 100 பேரை சந்திக்கிறோம். எல்லார் மீதும் அன்பு வந்துவிடுவதில்லை. அவற்றுள் யாரோ ஒரு சிலர் மட்டும்தான் நம்முடைய மனதிற்கு மிக நெருக்கமாகிறார்கள். அதற்குக் காரணம், அவர்களுக்கும் நமக்கும் இடையே ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.