Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

ஒருவரின் இறப்புக்கு கர்மாவே காரணம்.

05 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
ஒன்றுமே இல்லாதவர்கள் ஒரு வேளை சாப்பாடு வேண்டும் என்பது தேடலாக இருக்கிறது. சாப்பாடு கிடைத்தவர்களுக்கு நிறைய பணம் சேர்க்க வேண்டும் என்பது தேடலாக இருக்கிறது. நிறைய பணம் கிடைத்த பிறகு, வாழ்க்கையில் அமைதி தான் வேண்டும் என்பதை கடைசியில் தேடுகிறான்.ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் என்ன தேடல் முக்கியம் ?
ஒரு குழந்தை ஒரு பொருள் வேண்டும் என்று கேட்கும் போது நாம் “வேண்டாம்” என்போம். ஆனால் அந்தக் குழந்தையின் மனம் பொருளின் மீது தான் போகும். அதை வாங்கிக் கொடுத்த பிறகு, அந்தக் குழந்தை என்ன செய்யும்? அதை தூக்கிப் போட்டுவிடும்.

கடவுள் என்ன சொல்கிறார்? இந்தப் பிறப்பு மனிதனாக பிறந்துவிட்டது. “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்று சொல்கிறார்கள். ஆசையும் அவர்தான், பாவமும் அவர்தான். நாம் இதையெல்லாம் உணர்ந்து, “இதோடு போதும்” என்ற நிலைக்கு வருவதற்காகத்தான், “எனக்கு அடுத்தது எதுவுமே வேண்டாம், எந்த ஆசையும் வேண்டாம், இதோடு போதும்” என்ற நிலையை உணராத வரைக்கும் அதை உணர்த்திக்கொண்டே இருப்பார்.

ஆனால் நமக்கு எந்த ஆசையும் இருக்கக் கூடாது என்று நினைப்பதே ஒரு ஆசைதானே என்று சொல்கிறார்களே?
மனிதனுக்கு தூண்டுகோலே ஆசைதான். நீங்கள் கோவிலுக்கு போய் எதையும் கேட்காதீர்கள். “நான் தேர்வில் நன்றாகத் தேர்ச்சி பெற வேண்டும்”, “நான் வீடு வாங்க வேண்டும்”, “எனக்கு கடனெல்லாம் அடைய வேண்டும்” என்ற வேண்டுதலையும் வைக்காதீர்கள்.

இறைவனிடம் ஆத்மார்த்தமாக சரணாகதி அடையுங்கள். அவருக்கு நமக்கு என்ன வேண்டும், எதைக் கொடுக்க வேண்டும், எதைக் கொடுக்கக் கூடாது, நாம் எந்தத் தேவையில் இருக்கிறோம் என்பது தெரியும்.

நம்முடைய தமிழ் நூல்களில், சிவபுராணத்தை விட சிறந்த நூல் எதுவும் கிடையாது.

ஒரு மனிதனுடைய மரணம் என்பது, அவன் வாழ்ந்த வாழ்க்கைற்கேற்ப அமையும் என்று சொல்வார்கள். யாருக்கும் எந்த பிரச்சினையும் கொடுக்காமல் வாழ்ந்திருந்தால், மிகவும் அமைதியான விதத்தில் மரணம் இருக்கும் என்று சொல்வார்கள். மரணத் தருவாயிலேயே அவனுடைய கர்மாவை கழித்துவிட்டு இறந்து போகிறான் என்று எடுத்துக்கொள்ளலாமா ?
உண்மை தான். சிலருக்கு அகால மரணம் ஏற்படுகிறது. அந்த அகால மரணத்தை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நன்றாக வாழ்ந்தவர்களின் இறப்பே அவர்களுக்கு தெரியாது. யாருக்கும் எந்த சிரமம் கொடுக்காமல் திடீரென்று இறந்து விடுவார்கள்.

அதேபோல், நன்றாக வாழ்ந்தவர்கள், நிறைய புண்ணிய காரியங்களை செய்தவர்களின் இறப்பு என்பது மார்கழி மாதம், ஏகாதசி போன்ற சில திதிகளிலும், சில நட்சத்திரங்களிலும் அமையும். அவை மோட்சத்திற்குரிய திதிகள் என்று சொல்லப்படுகின்றன. செய்த புண்ணியத்தை பொறுத்து, இறப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

கர்மாவை கழித்துவிட்டு இறந்து போகிறான் என்றால், அது எப்படி அடுத்த ஜென்மத்திற்கு தொடரும்?
இன்றைய நிகழ்வை மட்டும் பேசக்கூடாது. மனிதனுடைய பிறப்பு 2 காரணங்களுக்காக ஏற்படுகிறது. இந்த ஆத்மா ஏற்கனவே நிறைய சுமைகளை சுமந்திருக்கிறது. அதைப் புரியவைக்க எளிய உதாரணம் சொல்கிறேன். நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உடற்பயிற்சி நிலையத்துக்கு போகிறீர்கள். நடைப்பயிற்சி செய்கிறீர்கள். ஒரு மாதத்திலோ, மூன்று மாதத்திலோ உடல் முழுவதும் குறைந்துவிடாது. 40 வருடமாகச் சேர்ந்த கொழுப்பு, உடனே குறையாது.

ஒரு நாள் கோவிலுக்கு போனாலோ, ஒரு நாள் தானம் செய்தாலோ, கர்மா குறைந்து விடாது. தொடர்ந்து செய்துகொண்டே வர வேண்டும். மெதுவாக தான் குறையும். நம்முடைய கர்மா குறைவதற்கு, நிறைய கோவில்களுக்கு போக வேண்டும். நிறைய தர்ம காரியங்கள் செய்ய வேண்டும். எப்பொழுதுமே “தர்மமே செய்யுங்கள்” என்று நான் சொல்லவில்லை. நம்மால் முடிந்த அளவுக்கு, நல்லது செய்யுங்கள் என்பதைத்தான் சொல்கிறேன்.

கோவில் உண்டியலில் காசு போடுவதைவிட, கோவிலுக்கு வெளியே இருப்பவர்களுக்கு உதவி செய்தால் அதிக புண்ணியம் சேரும் என்று சொல்கிறார்களே ?
“பாத்திரம் அறிந்து பிச்சை இடு” என்று சொல்கிறார்கள். இன்றைக்கு பல இடங்களில் வியாபாரமாக மாறிவிட்டது. கோவில் வாசலில் இருப்பவர்கள் அனைவரும் உண்மையிலேயே பசியால் வாடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. தானம்கூட நல்ல வழியில் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் புண்ணியமாக அமையும்.

பல கோவில்களில், “ஐயா, ஒரு வேளை சாப்பாடு வாங்கி தாருங்கள்” என்று ஒரு குழந்தையை நிறுத்தி வைத்திருப்பார்கள். நாம் இரக்கப்பட்டு உணவு வாங்கி கொடுப்போம். ஆனால் சிறிது நேரத்தில் அந்த உணவு மீண்டும் அதே கடைக்கே திரும்பி செல்வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

திருநள்ளாறு கோவிலில் நள தீர்த்தக் குளம் பக்கத்தில் வரிசையாக சாப்பாடு பொட்டலமாக கட்டி வைத்திருப்பார்கள். நாம் ஒரு சாப்பாடு ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கி் கொடுக்கிறோம். அதை திருப்பிக் கொடுத்துவிட்டு, இன்னொருவர் வரும்போது அவர்கள் அதையே வாங்கி கொடுப்பார்கள். இப்படி சுழற்சியில்தான் (Rotation) இருக்கிறது. உண்மையிலே இந்த சாப்பாட்டை திறந்து சாப்பிட முடியாத கெட்டுப்போன பொருள்.

திருநள்ளாறு, திருவிடைமருதூர், சூரியனார் கோயில் பல கோவில்களில் இப்படிப்பட்ட சம்பவங்களை நான் நேரில் கண்டிருக்கிறேன். அதனால் தானம் கொடுக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும். அது வியாபாரமாக மாறிவிடக் கூடாது.

உண்மையாக ஒரு வேளை உணவுக்குக் கூட கஷ்டப்படுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவது நல்லது. உண்மையாக இயங்கும் ஆசிரமங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் இருக்கின்றன. அங்கே சென்று நம்முடைய கையால் உணவு வழங்கி, அவர்களை மகிழ்விக்கலாம். அங்கிருக்கின்ற அனைத்து ஜீவன்களும் சந்தோஷப்படுவார்கள்.

ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து நடக்கின்ற நிகழ்வுகளுக்கு காரணம் கர்மாதான் என்று தெரிந்த பிறகு, எந்த கோவிலுக்குப் போய் வழிபட்டால் நல்லது என்று பரிந்துரைப்பீர்கள்?
அதை பொதுவாக சொல்ல முடியாது. ஒவ்வொருவருடைய கர்மாவிற்கும், அவரவர் நிலைக்கும் ஏற்றதாக இருக்கும். பல ஸ்தல வரலாறுகளிலும் அதை பற்றி கூறப்பட்டுள்ளது. அதை நாம் முடிவு செய்ய முடியாது.
கர்மா 2 வகைப்படுகிறது. ஒன்று பிராரப்தம். மற்றொன்று சஞ்சிதம்.

பிராரப்தம், முன்ஜென்மத்தில் பெற்ற கர்மா கடன்களால் இந்த பிறவியை எடுக்கிறோம்.
சஞ்சிதம், இந்தப் பிறவியில் புதிய பாவத்தை (கர்மா) சேர்த்துக்கொள்கிறோம்.

இந்த இரண்டையும் உணர்ந்து வாழ ஆரம்பித்தால், கெட்ட வீரியங்களிலிருந்து நம்மை கண்டிப்பாக காப்பாற்றிக்கொள்ள முடியும்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.