Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

ரிஷிகள் வழிபட்ட தெய்வங்கள்

05 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
நாடி ஜோதிடம் என்பது உண்மையா?. பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். கருத்து பக்கத்தில் (Comment) நிறைய பேர் "இதெல்லாம் பொய்" என சொல்கிறார்கள். உங்களுடைய கருத்து என்னவாக இருக்கிறது ?
ரொம்ப அதிர்ச்சியான கேள்வியை கேட்கிறீர்கள். கோயிலில் கருவறையில் தெய்வம் "இருக்கிறது" என்று நினைப்பீர்களா ?
ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொறுத்த மாறுபடும்.
இது முழுக்க சித்தர்களாலும், மகரிஷிகளாலும் வழங்கப்பட்ட பொக்கிஷம். என்னுடைய வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை இதில் பார்த்திருக்கிறேன். நிறைய பேருடைய வாழ்க்கைக்கு இது முன்னோடியாக இருக்கிறது. எந்த காலத்திலும் பொய்யாகாது. சரியான நபர்களை, சரியான இடங்களுக்கு போய்ப் பார்த்து, உங்களுக்கான உண்மையான ஓலையை எடுத்துப் படித்தால், 100% சரியாக இருக்கும்.

உண்மையான, போலியான ஜோதிடர்களை எப்படி கண்டுபிடிப்பது ?
ஒரு நல்ல பொருள் வேண்டும் என்றால், 4 இடங்களில் அதைப் பற்றி விசாரிக்கிறோம். ஆராய்ச்சி, ஆய்வு பண்ணுகிறோம். பிறகு அந்த இடத்திற்கு போய், "உண்மையிலேயே சரியானது தான்" என்பதை உணர்ந்த பிறகு நாம் அதை பெற்றுக் கொள்கிறோம். அப்படித்தான் நாடி ஜோதிடமும். எல்லா தொழில்களுக்கும் இதுதான். எல்லா பொருட்களிலுமே போலிகள் இருக்கிறது.

IPhone Charger வாங்க சென்றால், அசல் அல்லது நகல் வேண்டுமா? என்று கேட்கிறார்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் நாம் உண்மையா, பொய்யா? என்று ஆராய்கிறோம். விஷயம் தெரியாதவர்களிடம் போலி பொருட்களை கொடுத்து விடுவார்கள். நாடி ஜோதிடத்திற்கு உரியவர்கள், பரம்பரையாக சேவையை செய்து கொண்டிருக்கக்கூடிய 'வள்ளுவர்' குல மரபில் இருக்கக்கூடியவர்கள்தான். அவர்களே ஜோதிடத்திற்குரிய குடும்பம் என்பதை சோழர்களுடைய காலகட்டத்திலே பிரித்திருக்கிறார்கள். ஜோதிடம் சார்ந்த ஆய்வுகள், நூல்களை பார்த்தால், அதில் வள்ளுவர்கள் தான், ஆலயங்களில் பூஜை செய்யக்கூடியவர் வள்ளுவர்கள் தான். இந்த சாஸ்திரத்திற்கு உரியவர்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் இருக்கின்றன. அதுபோன்ற மனிதர்களை தேடிப் போனால் தான் சரியான ஓலையும், பலன்களும் கிடைக்கும்.

பழைய புராண கதைகளில் ரிஷிகள், சித்தர்கள் சபித்தால் நடக்கும் என்கிறார்களே ?
ஆமாம். சித்தர்கள், ஞானிகள் என்று ஏன் சொல்கிறோம்? இறைஞானத்தை தங்களுடைய தவ வலிமையாலும், உண்மையான பக்தியை இறைவனிடம் அர்ப்பணித்து பெற்றார்கள், அதனால் தான் ஞானி ஆகிறார்கள். அப்படிபட்ட இருக்கக்கூடிய சித்தர்களும், ஞானிகளும் இறைவனுக்கே சாபம் கொடுக்கக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள்.

தங்களுடைய தவவலிமைக்கான பலனை நிலைநாட்டுவார்கள். அவர்களை பொறுத்தவரை உண்மை, நேர்மை, பக்தி இருக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான். அவர்களை சோதிக்கக்கூடிய இடத்தில் யாராக இருந்தாலும் சாபம் கொடுப்பார்கள்.

உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளுங்கள். விருப்பமில்லை என்றால் அமைதியாக ஒதுங்கிவிடுங்கள். அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக, செயல்படும் பொழுது, ஏதோ ஒரு வகையில் அவர்களுடைய சாபத்திற்கு ஆளாகிறார்கள். "இது கடவுளுக்கு எங்கே தெரிய போகிறது?" என்று நினைக்கிறோம். நான் உங்களிடம் சிலவற்றை மறைக்கலாம், நீங்கள் என்னிடம் ஏதாவது மறைக்கலாம். ஆனால் நாம் இருவரும் என்ன பண்ணுகிறோம் என்பதை அவர்கள் கவனித்து கொண்டு, கணக்கு எழுதப்படுகிறது..

நீங்கள் ரிஷிகளை உணர்ந்திருக்கிறீர்களா?
நல்ல கேள்வி. இப்போது இந்த இடத்தில் உட்கார்ந்து பேசுவது நான் கிடையாது. நான் அவங்களை உண்மையாக குருவாக ஏற்று, அவர்களுக்கு பண்ணக்கூடிய நித்திய பூஜைதான் என்னை வழிநடத்துகிறது. இங்கே என்னுடைய குருநாதரை நான் எப்படி வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்.

அவர்களுடைய திருப்பாதத்தில் நான் சாஷ்டாங்கமாக சரணாகதி அடைந்திருக்கிறேன். நீங்கள் உங்க வாழ்க்கையை பற்றி கேட்கும்பொழுது, என் அறிவுக்கு தெரியாத விஷயத்தை அவர்கள் எனக்கு காட்டுவார்கள். அப்படிப்பட்ட விஷயங்கள் நிறைய நடந்திருக்கின்றன.

நீங்கள் எதற்காக வருகிறீர்கள், என்ன மாதிரியான கேள்வி கேட்க போகிறீர்கள் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியாது. "நான் இதையெல்லாம் கேட்கப் போகிறேன்" என்று நீங்கள் நினைத்து வந்திருந்தால், ஒருவேளை நான் அதற்கு தயாராகி இருந்தால், நீங்கள் என்னவெல்லாம் கேட்கப் போகிறீர்கள், உங்களுடைய அணுகுமுறை எப்படி இருக்க போகிறது என்பது எனக்கு தெரியும். அந்த நேரத்தில், உங்களுடைய தேவையை நான் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் என்னுடைய செயல்பாடுகள் இருந்தால், "மனிதன் தெய்வ ரூபம்", அந்தத் தெய்வம் உண்மையாக இருக்கக்கூடியவர்கள் (நாடி ஜோதிடர்கள்) மூலமாக உங்களுக்கு தீர்வுகளை கொடுக்கிறார்.

நீங்கள் ரிஷிகளை ஏற்று நடக்கிறீர்கள். ரிஷிகள் யாரை ஏற்று நடந்தார்கள் ? எந்த தெய்வத்தை அவர்கள் வழிபட்டார்கள் ?
"இந்த தெய்வம் பெரியது, சிறியது" என்று நம்மால் பிரிக்க முடியாது. எல்லாத்திற்கும் மூலாதாரம் இருக்கிறது. "அகம் பிரம்மம்" என்று சொல்வார்கள். நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. எல்லாவற்கும் மேலே இருக்கக்கூடிய பரம்பொருள் சக்தியான பரமேஸ்வரன் (சிவபெருமான்) தான். அதுதான் மூலம், அங்கே இருந்துதான் எல்லாமே பிரிக்கப்படுகிறது.

எல்லா மகரிஷிகளும், சித்தர்களும், சிவபெருமானை நோக்கி தவம் பண்ணியிருக்கிறார்கள். சிவபெருமானிடம் இருந்து பெற்ற வரங்கள் என்பது உலகத்தில் நிறைய உண்டு. சிவபெருமானை அதிகமாக தவம் செய்து வழிபட்டார்கள். இன்றைக்கு நிறைய இதிகாசங்களை படித்தாலும், அதில் வரம் கொடுக்கக்கூடிய கடவுள் பரமேஸ்வரனாக தான் இருப்பார்.

காக்கக்கூடிய கடவுள் விஷ்ணுவாக இருந்தாலும், வரம் பெற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்தும் பொழுது அவர்களை அழிப்பதற்கு அல்லது அடக்குவதற்கு விஷ்ணு அவதாரம் எடுத்தாலும், அதற்கு உதவக்கூடிய இடத்தில் பரமேஸ்வரன் இருப்பார். இது போன்ற இதிகாசங்களையும் மகரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய நூல்களை படிக்கும் பொழுது நிறைய விஷயங்கள் வரும். நாம் "இந்தத் தெய்வம் பெரியது, சின்னது" என்ற சொல்வதற்கான தகுதியிலோ, அதிகாரத்திலோ நாம் இல்லை.

(இந்த நேரத்தில் பூ கீழே விழுகிறது)

பாருங்கள்... பூ விழுந்துவிட்டது, இதுதான் உண்மை. எவ்வளவோ விஷயங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம், அவர் சிரசிலிருந்து (தலையிலிருந்து) பூ விழுகிறது. இதுவே ஒரு ஆதாரம் தான். அதனால் கேள்விகள் எல்லாவற்றையும் சோதிப்பதற்காக கேட்க கூடாது. மக்களுக்கு பயனுள்ள கேள்வியை எடுத்து சொல்லலாம்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.