Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

பராபவ வருடத்தின் 'பஞ்சாங்க படனம்'

05 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
அகத்திய மகாநாடி ஸ்தாபனத்தின் நிறுவனர், ஐயா கந்தவேல் அவர்கள், இந்த பராபவ வருடத்தின் 'பஞ்சாங்க படனம்' என்ற மகா உன்னதமான வைபவத்தை தொடங்குகின்றார். பஞ்சாங்க படனத்தை கேட்பதாலேயே அனைவருக்கும் நல்ல தேக ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது ஐதீகம். யார் ஒருவர் பஞ்சாங்க படனத்தைச் சிரவணம் (கேட்பது) செய்கின்றாரோ, அவருடைய ஆயுள் அபிவிருத்தியாகும். அவர்களுக்கு வேண்டிய மங்கலங்கள் யாவும் கைகூடும்.

குரு என்பவர் நம்மை வழிநடத்தி செல்பவர். நம் குருநாதர் கந்தவேல் ஐயா அவர்கள், லோபா முத்ரா சமேத அகஸ்தீஸ்வர சுவாமியின் பரிபூரண அருளோடு, நாம் இந்த ஆண்டு எவ்வாறு இருக்க வேண்டும், எவற்றை பின்பற்ற வேண்டும் என்பதைத் தனது திருவாக்கினால் பஞ்சாங்க படனமாக வழங்குகிறார். உலகம் முழுவதும் மங்கலங்கள் பெருகவும், தானியங்கள் செழித்து அனைத்து ஜீவராசிகளும் நல்வாழ்வு பெற வேண்டி இந்த பூசை தொடங்குகிறது.

குரு ஆராதனை மந்திரங்கள்:
குரவே சர்வலோகானாம் பிஷஜே பவரோகிணாம் |
நிதயே சர்வவித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம: ||


அகத்திய மகா யோகியே, ஆதி குருவே உமக்கு நமஸ்காரம்!
'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்ற வாக்கிற்கிணங்க, உலக க்ஷேமத்திற்காக இந்த பஞ்சாங்க படனம் அர்ப்பணிக்கப்படுகிறது.

வாழ்த்துப் பாடல்:
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

சில பெரியவர்கள் சொல்லுவார்கள், 'நிறைய சொத்துப்பத்தோடு வாழ்ந்தோம், இப்போது எல்லாம் போய்விட்டது' என்று. போனதை நினைத்து வருத்தப்படாதீர்கள். சில நேரங்களில் கர்மாவானது, வேறு ஒரு ரூபத்தில் கஷ்டத்தை கொடுப்பதற்கு பதிலாக, சொத்துக்களாக போவது ஒரு வகையில் இறைவனின் அனுக்கிரகமே. ஏனென்றால், போன சொத்தை திருப்பி சம்பாதிக்கக்கூடிய தகுதியும், திறமையும் உங்களுக்கு உண்டு. ஆனால், ஒரு உயிர் போனால் திரும்பி வராது. உடலில் ஒரு பகுதி ஊனமானால் அது ஊனம்தான். எனவே, இறைவன் ஒருவருடைய உயிரைக் காக்க வேண்டும் என்று நினைக்கும்போது, அவருக்கு பண விரயத்தையோ அல்லது ஏமாற்றங்களையோ கொடுத்து கர்மாவைக் கழிக்கச் செய்வார். அது அந்த நேரத்தில் வலிக்கும். ஆனால், அதன் பின்னர் இழந்ததை விட இரட்டிப்பாக இறைவன் உங்களுக்கு திருப்பிக் கொடுப்பார் என்பதே உண்மையான கருத்து. எனவே, இழப்புகளை கண்டு கலங்காமல் இறைவனை சரணடையுங்கள்.

இந்த 2026 யாருக்குச் சாதகமாக இருக்கும்?
என்னுடைய நலவிரும்பிகள் பலர், 'ஐயா, அரசியலை பற்றிப் பேசாதீர்கள், அது உங்களுக்கு வேண்டாமே' என்று பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருந்தும் நான் இரண்டு பதிவுகள் கொடுத்திருக்கிறேன். காலங்கள் அதற்கு பதில் சொல்லும். வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், உண்மையிலே வெற்றி பெற முடியாமல் தவிப்பவர்களுக்கு நாம் ஒரு துணையாக நிற்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு பதிவுகளையும் கொடுத்து கொண்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் நம்முடைய உதவிகள் அவர்களுக்கு தேவைப்படும் என்ற நிலைப்பாட்டில் தான் பேசுகிறேன்.

எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் 'சுவாமி' (வருஷ புருஷன்) 14-ஆம் தேதி இரவு பிறக்கிறார். பஞ்சாங்கத்தின்படி, பராபவ வருஷ மேஷ சங்கிராந்தி பலன்களை பார்ப்போம்.

மகர சங்கிராந்தி தேவதையின் தோற்றம்:
ஸ்திரீ புருஷ ரூபமாய், இரண்டு முகமும், மூன்று கண்களும், நான்கு வாயும், சிவப்பு தந்தமும், நீண்ட நாக்கும், தொங்குகின்ற புருவமும், நீண்ட காதும், எட்டு கைகளும், இரண்டு கால்களும், செம்பட்டை மயிரும் கொண்ட விகாரமான கருப்பு சரீரத்துடன் கோர ரூபத்துடன் வருவாள். மிஸ்ரகை நாமதேயம் கொண்ட இவள், வில் ஆயுதம் ஏந்தி, எருது வாகனத்தில் அமர்ந்து மேற்கு திக்கு நோக்கிச் செல்கிறாள்.

• சந்நியாசிகளுக்கு, ஆன்மீக ரீதியாக இருக்கும் மகான்களுக்கு இந்த ஆண்டு சில சங்கடங்கள் ஏற்படும்.
• வருடம் முழுவதும் நல்ல மழை இருக்கும், ஜனங்கள் சௌக்கியமாக இருப்பார்கள்.
• இந்த வருடம் பிறக்கும் சுவாமி மிகவும் ஆக்ரோஷத்தோடும், உக்கிரமாகவும் வருகிறார்.
• இந்த ஆண்டு ஆக்ரோஷமாக இருப்பவர்களிடம் நாம் கோபப்படக்கூடாது. சரணாகதி அடைவதே நல்லது. அதர்மங்களை செய்யாதீர்கள். முடிந்த அளவு தான தர்மம், பூஜை புனஸ்காரங்கள் செய்யுங்கள். நாம் செய்யும் ஒவ்வொரு நற்காரியமும் நமக்கும், நம் சந்ததியினருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
• கோபத்தில் யாரும் தவறான முடிவு எடுக்காதீர்கள். வன்மம், குரோதம், காமம் போன்றவை இந்த ஆண்டு தலைதூக்கி ஆடும். ஈவு இரக்கம் இல்லாத சூழ்நிலை நிலவும். எனவே, சண்ட சச்சரவுகளைத் தவிர்த்து பாதுகாப்பாக வாழுங்கள்.
• பெண் குழந்தைகளை தனியாக எங்கேயும் அனுப்பாதீர்கள். தெரிந்தவர்களிடமோ அல்லது வயதானவர்களிடமோ கூட குழந்தைகளை நம்பி விட்டு செல்லாதீர்கள். அவர்களுக்கு சரியான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
• நகைப் பறிப்பு, வழிப்பறிகள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. திருடுபவர்களுக்கு உயிரின் மதிப்பு தெரியாது, அவர்களுக்கு நகை தான் பெரிது. எனவே, பொது இடங்களில் கவனமாக இருங்கள்.
• மழை பெய்தாலும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள். குறிப்பாக சென்னையில் பெய்யும் மழை நிலத்தடி நீராக மாறாமல் கடலில் கலக்கிறது. எனவே, தண்ணீரை வீணாக்காதீர்கள்.
• கலியுகத்தில் தெய்வ வழிபாடுதான் நமக்கு துணை. தெய்வத்தை எப்படி வணங்க வேண்டும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதன்படி இறைவனை வேண்டி ஷேமமாக இருங்கள்.
• வாழ்க்கை நல்லபடியாக அமைய இறைவனின் அனுக்கிரகம் உங்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். உங்கள் நலனுக்காக நானும் என்னால் முடிந்த பிரார்த்தனைகளை செய்து கொண்டிருக்கிறேன்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.