Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

மருத்துவர்களால் காப்பாற்ற முடியாத உயிரை மீட்ட குருநாதரின் அருள்!

05 Nov 2026 2 நிமிட வாசிப்பு வீடியோ
ஏன் பரிகாரங்கள் மிக பழமை வாய்ந்த கோவில்களை சார்ந்து இருக்கின்றன ?
கோவில் என்பது ஒருவருடைய கர்மா தொடர்பான விஷயங்களோடு வருவது. மகரிஷிகள் குறிப்பிடும் கோவில்கள் குறைந்தபட்சம் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அவ்வையார் வாழ்ந்த காலத்தில் தான் அகஸ்தியரும் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் மகரிஷிகள் வாழ்ந்தார்கள் என புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. கோவில் தெய்வங்களின் கதிர்வீச்சாகட்டும் அல்லது கிரகங்கள் சார்ந்த கதிர்வீச்சாகட்டும், மகரிஷிகளே நேரில் சென்று பிரதட்சணம் செய்து சில சக்திகளை நிலைநிறுத்தியதாக புராணங்கள் கூறுகின்றன. அந்த தலங்களுக்கு செல்லும்போது அதற்கான பலன் நமக்கு உடனடியாகக் கிடைக்கும்..

ஸ்ரீவாஞ்சியம் என்பது நவகிரகத் தலம் கிடையாது. ஆனால், அங்கே எமதர்மராஜனும் சித்திரகுப்தனும் இருக்கிறார்கள். பொதுவாக முதலில் விநாயகருக்கு பூஜை செய்வோம், பிறகு ஆலயத்தின் முதன்மை கடவுளான பரமேஸ்வரனை வணங்குவோம். ஆனால், இந்த கோவிலில் குப்த கங்கை தீர்த்த கரையில் இருக்கும் விநாயகரை வணங்கிய பிறகு, எமதர்மரை வணங்கிவிட்டு, சிவபெருமானையே வழிபட வேண்டும் என்பது விதி. அதற்குபிறகு அம்பாளை பார்க்கச் செல்வோம். சிவாச்சாரியார்கள் முதலில் எமதர்மருக்கும் சித்திரகுப்தனுக்கும் தான் வழிபாடு செய்வார்கள்.

இந்த கோவில் 5,000 ஆண்டுகள் பழமையானது. ஒரு யுகத்தில் மேற்கு பார்த்தவாறு இருந்த கோவில், பின்பு கிழக்கு நோக்கி திரும்பியதாக தலபுராணம் கூறுகிறது. எம பயம் என்பது உயிர் பயத்தை குறிக்கும். அஷ்டமாதிபதி திசை அல்லது மாரகாதிபதி திசை நடக்கும்போது, கர்ம வினைப்படி உயிருக்கு கண்டங்கள் அல்லது விபத்துகள் ஏற்படலாம். அத்தகைய பயம் உள்ளவர்களுக்கு இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆகம விதிமுறைப்படி வழிபாடு செய்வது நமக்கு உடனடி பலனை தரும்.

உதாரணமாக, ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். நன்றாக இருந்தவர் திடீரென உடல் செயலற்ற (Coma) நிலைக்கு சென்றுவிட்டார். அது ஒரு வல்லரசு நாடு, அங்கே மருத்துவர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், எந்த மருத்துவமும் பலன் தரவில்லை. அவர்களால் நேரில் வர முடியவில்லை. அவர்களுக்கு நாம் நாடி படித்து, நானே ஸ்ரீவாஞ்சியம் சென்று முறைப்படி செய்ய வேண்டியவற்றை செய்தேன். சன்னதியில் ஹோமம் வளர்த்து, சுவாமிக்கும். அம்பாளுக்கும் அபிஷேகம் செய்த பிரசாதத்தை அந்த நாட்டிற்கு எடுத்து சென்றார்கள். இன்று அவர் உயிரோடு ஆரோக்கியமாக இருக்கிறார். இதற்கு குருநாதரின் அனுக்கிரகம் வேண்டும்.

நான் தெய்வத்தை நம்புகிறேன். உங்களுக்கு மகரிஷி பரிகாரத்தை சொல்லியிருந்தால், அதனால் கண்டிப்பாக மாற்றம் கிடைக்கும் என்று நான் உறுதியாக சொல்வேன். அவர்களும் முழு ஈடுபாட்டோடு செய்தார்கள். 'பரிகாரம் எல்லாம் சும்மா, விதிதான் பெரியது' என்று சிலர் சொல்கிறார்கள். அந்த விதியை வெல்வதற்கும் ஒரு விதி வேண்டும். அதை இறைவன் அமைத்துக் கொடுக்கிறார்.

எமன் ஏன் ஸ்ரீவாஞ்சியத்தில் வழிபாடு செய்தார்? எமதர்மனுக்கும் சித்திரகுப்தனுக்கும் அங்கே என்ன வேலை? அங்கே விபூதி தான் கொடுப்பார்கள். நீங்கள் உடைக்கும் தேங்காயை, பழத்தை கொடுக்க மாட்டார்கள். அந்த இடத்தில் எமதர்மரும் சித்திரகுப்தரும் வரம் வாங்குகிறார்கள். அவர்களுக்கு இறைவன் அனுக்கிரகம் செய்திருக்கிறார். அந்த அனுக்கிரகம் உங்களுக்கும் கிடைக்கிறது என்பதுதான் சூட்சுமம்.

சுவாமியின் திருமேனியில் பட்டு வரும் தீர்த்தம் மருந்தாகிறது. அந்த இடங்களில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். அவர்களே சிலைகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதில் பல மூலிகைகளும், மருந்துகளும் கலந்திருக்கின்றன. இப்போது, ஜலத்திலே பச்சைக் கற்பூரம், ஏலக்காய் போட்டு தீர்த்தமாக கொடுக்கிறார்கள். அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், சுவாமியிடமிருந்து நேரடியாக வரும் தீர்த்தமே உண்மையானது. அதுவே உண்மையான பலனை தரும்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.