ஆத்மார்த்தத் துணைகள் (Soulmates) எந்த திசையிலிருந்து வருவார்கள், பெண்ணின் அம்சங்கள், கண்கள், முக அமைப்பு போன்றவை சொல்ல முடியுமா ?
நிறைய சொல்லியிருக்கிறார்கள். அதைப் படிக்கும்போது நமக்கே, ‘என்னடா, இவருடைய மனைவியை பற்றி இப்படியெல்லாம் நாம் சொல்கிறோமே’ என தோன்றும். வியப்பாக இருக்கும். அவர்கள் எந்த திசையிலிருந்து வருவார்கள், அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் என்ன அடையாளங்கள் இருக்கும் ? கோவில், வங்கி, தானியங்கி பண இயந்திரம் (ATM), அழகு நிலையம், பள்ளி, பழமையான விருட்சங்கள் (மரங்கள்), அவர்கள் வீடு எந்தப் பக்கம் நோக்கி இருக்கும், வாசல் எப்படி இருக்கும் என்பது போன்ற அடையாளங்களெல்லாம் இருக்கும். சிலருக்கு பக்கத்தில் ஓர் இறைச்சிக் கடை கூட இருக்கும். அதெல்லாம் எங்களுக்கும் மிகவும் ஆர்வமாக இருக்கும்.
அந்தப் பெண்ணைப் பற்றிய அடையாளங்களும், முக அமைப்பு, வட்ட முகமா, கோணல் முகமா, சதுர முகமா என்பதெல்லாம் சொல்லப்படும். புருவ அழகு, மூக்கு, கண்கள், உடல் அமைப்பு ஆகியவை விவரிக்கப்படும்.
நாடி ஜோதிடத்தை பாரம்பரியமாக உங்களைப் போன்றவர்கள் மட்டும்தான் பார்க்க முடியுமா? திடீரென்று ஒருவர் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டால், அதற்கு விதிமுறைகள் இருக்கிறதா?
கட்டாயம் விதிமுறை இருக்கிறது. நான் இந்த இடத்தில் உட்காருவதற்கு, 5 வருட கஷ்டம் என்பது எனக்குத்தான் தெரியும். குரு சேவை செய்தாக வேண்டும். நான் கற்றுக்கொள்ளும் பொழுது இருந்த சூழ்நிலையில், மற்றவர்கள் இருப்பீர்களா என்று எனக்கு தெரியாது. 'இப்படியெல்லாம் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டுமா?' என்று நீங்கள் யோசிப்பீர்கள். ஒரு கட்டத்தில் நானே, 'இந்த தொழிலே வேண்டாம்' என்று யோசித்தேன். ஏனென்றால் பல கஷ்டங்கள் உண்டு. திட்ட மாட்டார்கள், அடிக்க மாட்டார்கள், ஆனால் வேலைகளின் அழுத்தம், எனக்கு தூக்கமே 3 மணி நேரம் தான். இரவு 1 மணி வரைக்கும் வேலை கொடுப்பார்கள். காலையிலே 3 மணிக்கே எழுப்பி விடுவார்கள்.
அன்றைக்கு அவர்கள் செதுக்கிய சிலைதான் நான். அன்று வருத்தமாக இருந்தது. இன்றைக்கும் என்னுடைய குருநாதர், எனக்கு கற்றுக் கொடுத்த அனைத்து குருமார்கள் இருக்கிறார்கள். அவர்களை நான் மறக்கவில்லை. எனக்குக் கிடைக்கக்கூடிய புகழ் அவர்களுக்கு போய் சேரும்.
பெரிய பாறைக்கல் உளியால் குத்து வாங்குவதனால் தான் சிலையாக ஆகிறது.
எங்களுடைய குருமார்கள் கொடுத்த பாடங்கள் அன்றைக்கு எனக்கு வருத்தமாக இருந்தாலும் கூட, இன்றைக்கு நான் நன்றாக இருப்பதற்கு காரணம் அவர்கள்தான்.
மற்ற ஜோதிட முறைகளை விட, நாடி ஜோதிடத்தால் மட்டும் எப்படி துல்லியமாக பலன்களை சொல்ல முடிகிறது?
இதனை நான் நிறைய பதிவுகளில் தொடர்ந்து சொல்லி வரக்கூடிய விஷயம். பிரம்மா எல்லாரையும் சரிசமமாகத்தான் படைக்கிறார். ஒருவரை உயர்ந்தவராகவும், இன்னொருவரைத் தாழ்ந்தவராகவும் படைப்பதில்லை. 'எல்லாக் குழந்தையும் மண்ணில் பிறக்கையிலே நல்ல குழந்தைதான்'. அவர்களின் வளர்ப்பு முறைதான் தீர்மானிக்கிறது. இருந்தாலும் கூட, ஒரு மனிதனுக்கு நல்ல சிந்தனையும், நல்ல புத்தியும் வருவதற்கும், அவன் பாவச் செயல்களில் ஈடுபடுவதற்கும் காரணமாக இருப்பது அவனுடைய கர்மா தான்.
இது தவறு, இந்தத் வழியில் நாம் போகக்கூடாது. இதை செய்தால் நம்மை மட்டும் பாதிக்காது, நம்முடைய சந்ததியையும் பாதிக்கும். இதற்காக இன்னொரு பிறவி எடுக்க வேண்டும். இன்றைக்கு, இந்த நேரத்தில் சந்தோஷத்தை அனுபவித்துவிட்டால் போதுமானதாக இருக்காது. அதன் பின் நம்முடைய எதிர்கால காலத்தையும் உணர வேண்டும். அதையெல்லாம் யோசிக்காத பட்சத்தில், பாவக் கர்மாவானது கூடிக் கொண்டே போகிறது.
பிறப்பு ஜாதகத்தைக் கணித்து சொல்லக்கூடிய ஜோதிடத்திற்கும், நாடி ஜோதிடத்திற்கும் உள்ள வித்தியாசம் (கர்மா) அதுதான். நிறைய ஜோதிடர்களுடைய வாக்கு கூடத் தப்பாகிறது. பலருக்கு 40 வயது ஆகியும் திருமணம் ஆகியிருக்காது. 'இந்தக் குரு பலனில் திருமணம் ஆகிவிடும், அடுத்தக் குரு பலனில் திருமணம் ஆகிவிடும், அடுத்த திசை அல்லது புத்தியில் திருமணம் ஆகிவிடும்' என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், எதுவுமே நடந்திருக்காது.
அப்படியென்றால், சொன்ன ஜோதிடர் பொய்யா? அல்லது பார்க்கப்பட்ட ஜாதகம் தப்பா? அதை தீர்மானிக்கின்ற இடத்தில் உன்னுடைய கர்மா இருக்கிறது.
ஓலைச் சுவடி கிடைக்காதவர்கள் இருக்கிறார்களா?
ஒரு வருடமாக ஓலைச் சுவடி கிடைக்காதவர்களாக இருக்கிறார்கள். கொடுப்பினை வரவில்லை. அவர்களுடைய விதியை தெரிந்து, வாழ்வதற்கான வழி அமைந்து கொடுக்கவில்லை. அதற்கான காலங்கள் வரவில்லை.
பலருக்கு நாடி வாசித்ததில் மிகவும் அதிர்ச்சியான விஷயங்கள் இருக்கிறதா?
ஒவ்வொருவருடைய நாடியிலுமே ஒரு அதிர்ச்சி உண்டு. அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. 'இது எப்படி சாத்தியம், எதை வைத்து இப்படி வந்திருக்கிறது?' என்று எனக்குள்ளேயே நிறைய கேள்விகள் வந்திருக்கின்றன. ஆனால், நம்முடைய மனித சக்திக்கு அப்பாற்பட்டதுதான் தெய்வ சக்தி. அதில் அதிர்ச்சியான, என்னால் மறக்க முடியாத விஷயங்களும் நிறைய இருக்கின்றன.
நீங்கள் என்றைக்காவது உங்கள் குடும்பத்திற்கே நாடி பார்த்திருக்கிறீர்களா?
என்னுடைய ஜாதகத்தை என்னுடைய நாடியில்தான் எடுத்திருக்கிறேன். என் நாடியில் சொல்லப்பட்ட விஷயங்களும் எனக்கு் சரியாக இருந்தன. என் வாழ்க்கை முறையில், சில விஷயங்கள் பட்டுத்தான் திருந்த வேண்டும் என்று இருக்கிறது, பிறர் சொல்லி நாம் திருந்த மாட்டோம். 'இந்த நேரத்தில் இதை செய்யாதே, உனக்குப் பிரச்சனை வரும்' என்று சொல்லும்போது நம்முடைய மனம் அதனை ஏற்றுக்கொள்ளாது. செய்துவிட்டு அதன்பிறகு வருத்தப்படுவோம். என்ன சொன்னாலும் மனம் கேட்காது. அந்த மாதிரி நிறைய பேருக்கு வாழ்க்கையில் நடந்திருக்கிறது, எனக்கும் அது நடந்திருக்கிறது.
பெண்களை, ஆண்களை ஏமாற்றுபவர்கள் (Playboy, Playgirl) போன்ற விஷயங்களைச் சொல்வீர்களா?
கண்டிப்பாக சொல்ல முடியும். எல்லாருமே காதலிப்பது உண்மையான காதல் இல்லை. இப்போது காதல் கிடையாது, எல்லாமே காமம். இன்றைக்கு 'வணக்கம்' (Hi) சொல்கிறார்கள், நாளைக்கு 'போய்விட்டு வருகிறேன்' (Bye) சொல்லிவிடுகிறார்கள். ஒரு வாரம் பழகி, தேவையானதை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அதன்பின் 'உன் வாழ்க்கையை நீ பார், என் வாழ்க்கையை நான் பார்க்கிறேன்' என்று சென்று விடுகிறார்கள். ஆணாக அல்லது பெண்ணாக இருக்கட்டும், உண்மையான காதல் யாரிடமும் கிடையாது.
ஒரு தம்பதி புத்திர பாக்கியத்திற்காக, நாடியை பார்த்து கோவிலுக்குப் போனால் பலன் கிடைக்குமா?
கண்டிப்பாக. அதனால் பயன்பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மகரிஷி சொன்ன நிறைய கோவில்கள், வெளியில் தெரிய வந்ததற்கான காரணமே எங்களைப் போன்ற ஜோதிடர்களும், நாடி ஜோதிடமும் தான். 'இப்படி ஒரு கோவில் இருக்கிறது' என்பது யாருக்கும் தெரியாது. அதனுடைய சூட்சுமம் யாருக்கும் தெரியாது. மகரிஷியால் சொல்லப்பட்டு, இன்றைக்குப் பிரபலமாக பேசப்படக்கூடிய கோவில்கள் பல உண்டு.
காளஹஸ்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
காளஹஸ்தி கேதுவினுடைய தலம். பிரபஞ்சத்தை இயக்கக்கூடிய 5 சக்திகள் நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, நிலம் ஆகும். இந்தப் பிரபஞ்சத்திற்குள்தான் ஒவ்வொரு உயிரினமும் கட்டுப்பட்டிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தை இயக்கக்கூடிய கடவுள் பரமேஸ்வரன். பரமேஸ்வரனுடைய வாயு தலம் எனப்படும் காளஹஸ்தி, கேதுவினுடைய பரிகாரத் தலமாகும். கேதுவினால் பாதிக்கப்படக்கூடியவர்கள், கேது மகாதசை நடக்கக்கூடியவர்களுக்கு நிவர்த்திக்கான தலம்.
ஆனால், இன்றைக்கு நிறைய கோவில்களில் ஆகம முறைப்படி சரியாக செய்கிறார்களா என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால், இன்றைக்கு கூட்டம் அதிகமாகிவிட்டது. பணத்தின் மீதான எண்ணமும் எல்லாருக்குள்ளும் அதிகமாகிவிட்டது. அதனால், பரிகார முறைகளை பல கோவில்களில் சரியாக செய்வதில்லை.
வேறு மதத்தவர்களுக்கு நாடி ஜோதிடம் பார்க்க முடியுமா?
கிறிஸ்தவ மதம் தோன்றி 2026 ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்னால் மனிதனே கிடையாதா? கிறிஸ்தவ மதம் தோன்றிய பின்பு தான் இஸ்லாமிய மதம் சொல்லப்படுகிறது. ஆனால், 5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நாடி ஜோதிட சாஸ்திரம் எழுதப்பட்டுவிட்டது. ரிஷிகள், மகான்கள், முனிவர்கள் வாழ்ந்த காலம் அது. எனவே, மதத்திற்கும் சாஸ்திரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
அப்படியென்றால் அவர்களை எந்த கோவிலுக்கு போகச் சொல்வீர்கள்?
அதனை நாம் தீர்மானிக்க மாட்டோம். மகரிஷி அந்தச் சுவடியில் என்ன பலாபலன் சொல்லியிருக்கிறாரோ அதுதான். இதையே Bible கூடச் சொல்கிறது. இயேசுநாதர் இமயமலையோடு தொடர்புடையவர், அந்த ஒரு விஷயத்தோடு ஒன்றிணைத்து சில தகவல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நானும் கிறிஸ்தவ மதத்தில் இருக்கக்கூடியவர்களோடு பழகும்பொழுது, இது போன்ற விஷயங்களையெல்லாம் பகிர்ந்துகொண்டதுண்டு.
ஆனால், இன்றைக்கு யார் ஒப்புக்கொள்வார்கள்? 'நீயா நானா?', 'நான் உயர்ந்தவனா நீ உயர்ந்தவனா?', 'என்னுடைய கொள்கை உயர்ந்ததா உங்களுடைய கொள்கை உயர்ந்ததா?' என்ற காலகட்டத்தில் மக்கள் வரும்பொழுது, பழமை மறைக்கப்படுகிறது. இப்போது மரபுகளை யாரும் கடைப்பிடிப்பது இல்லை.
உங்களுடைய நலனுக்காகவே இதையெல்லாம் நான் முன்வைக்கிறேன். நானும் உங்கள் அனைவருக்காகவும் என்னால் முடிந்த பிரார்த்தனைகளையும் வழிபாடுகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
வாழ்க வளமுடன். நன்றி, வணக்கம்.
ॐ