Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

ஜாதகத்தில் 5-ஆம் பாவகம் பாதிக்கப்பட்டால் ஏற்படும் பெரும் இழப்புகள்

04 Nov 2026 4 நிமிட வாசிப்பு வீடியோ
நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு ஏதேனும் வயது வரம்பு இருக்கிறதா?
வயது வரம்பு கிடையாது. ஒரு வயதில் இருந்து பார்க்கலாம்.

வயது முதிர்ந்தவர்களுக்கு ரேகைகள் சரியாக இருக்காதே?
90 வயதுடையவர்களுக்கு நாடி ஜோதிடம் பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு இருக்கக்கூடிய ஹார்மோன் சக்தியும், ஆற்றலும் இன்றைக்கு இளமையில் இருக்கக்கூடிய, 45 வயது ஆட்களுக்கு கிடையாது. "காதல் 60-லும் வரும்" என்பதை நான் நேரடியாக நிறைய மனிதர்களின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன்.

எந்த மாதிரியான விஷயங்களுக்கு உங்களிடம் நாடி பார்க்கலாம்?
எல்லாவற்றிற்குமே பார்க்கலாம். நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நாடி ஜோதிடம் பார்க்கலாம். திருமணம் தடையாகி, வரன் அமையாதவர்களுக்கு, எப்போது திருமணம் நடக்கும், மணமகன் அல்லது மணமகள் யார் என்ற விபரங்கள் நாடியில் துல்லியமாக வந்துவிடும். திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் இருந்தால் அதற்கும் கட்டாயம் தீர்வு உண்டு.

இரண்டாவது வாழ்க்கைத்துணை அமைய யோகம் இருக்கிறதா? மறுமணம் செய்யலாமா? முதல் வாழ்க்கையில் நடந்த தவறுகள் இரண்டாவது வாழ்க்கையிலும் நடக்கக் கூடாது என்று நினைப்பவர்களுக்கும் நாடி ஜோதிடத்தில் தீர்வு உண்டு.

குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்கள், 2 – 5 மாதங்களுக்குள்ளே தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுபவர்கள், குழந்தை வரம் வேண்டி நாடி ஜோதிடத்தை நாடலாம். படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்களுக்கும் நாடி மூலம் வழிகாட்டலாம்.

எதற்கு நாடி பார்க்க மாட்டீர்கள் என்று தான் கேட்க வேண்டும்.

சிலருக்கு தங்கள் குலதெய்வம் தெரியவில்லை என்கிறார்களே?
குலதெய்வத்தைக் கண்டுபிடிப்பது நாடி ஜோதிடத்திற்கு மிகச் சாதாரணமான விஷயம். 5-வது காண்டத்தை ஆராய்ந்தால், குலதெய்வம் எங்கே இருக்கிறது? குலதெய்வ வழிபாடு ஏன் தடைப்பட்டிருக்கிறது? குலதெய்வ அனுகிரகம் கிடைக்காமல் போனதற்கான காரணம் என்ன? போன்ற விபரங்களை எடுத்துவிடலாம்.

கர்ம வினைப்படி என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று ஓலையில் பார்க்க வேண்டும். முன்னோர்களின் ஆத்மா இவர்களோடு துணையாக நிற்கிறதா, இல்லையா என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கலாம்.

5-ம் இடம் என்பது பூர்வீகம், புத்திர பாக்கியம், நம்முடைய முன்னோர்கள், குலதெய்வம் ஆகியவை குறிக்கும்.

5-ம் இடம் கெட்டுப் போனாலே நிறைய விஷயங்கள் பாதிக்கப்படும். அதிர்ஷ்டம் இல்லாத நிலை உருவாகும். குலதெய்வ அனுக்கிரகம் இல்லாமல் போகும். முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையாமல் இருப்பதால், அவர்களின் சாபங்கள் அந்தக் குடும்பத்தில் தொடரும். பித்ரு சாபம் இருந்தால் வம்ச விருத்தி இருக்காது. ஆண் வாரிசு இல்லாமல் போகும்.

5-ம் இடம் பலமாக இருந்தால், இப்போது சொன்ன அனைத்து எதிர்மறை பிரச்சினைகளும், தலைகீழாக மாறி நற்பலன்களாக நடக்கும். நல்ல விஷயங்கள் அனைத்துமே ஜாதகருக்கு சாதகமாக அமையும்.

உங்களிடம் அதிகப்படியாக எந்த மாதிரியான பிரச்சினைகளுக்காக நாடி பார்க்க வருகிறார்கள்?
பெரும்பாலோர் குடும்ப வாழ்க்கை, திருமணம், வேலைவாய்ப்பு, நோய் மற்றும் கடன் தொல்லைகளுக்காக வருகிறார்கள்.

நோய், இல்லற வாழ்க்கை பற்றிச் சொல்வது புரிகிறது. ஆனால் கடன் என்பது அவர்கள் விருப்பப்பட்டு வாங்குவதுதானே ?
கர்ம வினைகளும், இப்பிறவியின் கிரக அமைப்புகளும், படித்து முடித்து வேலை தொடங்கிய மாதத்திலிருந்தே அவர்களின் வாழ்க்கை ஒரு பெரிய நிதி நெருக்கடிக்குள்ளும், கடமைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் போதவில்லை. போதுமான வருமானம் இல்லாதபட்சத்தில் கடன் வாங்குவார்கள், சம்பாதித்துக் கடனை அடைப்பார்கள். மீண்டும் கடன் வாங்குவார்கள். இது ஒரு முடிவே இல்லாமல் பலருடைய வாழ்க்கையில் தொடர்கிறது.

சம்பாதிக்க ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை கடனோடு வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதேபோல பங்காளி சண்டைகள், மறைமுகமான எதிர்ப்புகள், தொழில் ரீதியான போட்டிகள் போன்றவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

கடன், நோய், எதிரி, வழக்கு ஆகிய விஷயங்கள் 6-ம் பாவகத்திற்குள் அடங்கும். சம்பந்தமே இல்லாமல் 10 - 20 வருடங்களாக நீதிமன்ற வழக்கு இழுத்துக் கொண்டே இருந்தால், அதற்கு 6-ம் இடம் பாபத்துவமாகி கெட்டதுதான் காரணம்.

சொத்தை விற்காமல் இருப்பது, சொத்து தகராறுகள் நீடிப்பது போன்ற பிரச்சினைகளுக்கு நாடி ஜோதிடம் உதவுமா?
கண்டிப்பாக உதவும். ஏன் அந்தச் சொத்து விற்கவில்லை, சொத்தால் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் வருகின்றன, அந்தச் சொத்தில் ஏதேனும் சூனியப் பாதிப்புகள் இருக்கின்றனவா, அதைச் செய்தது யார் என்பதை அவர்களின் தனிப்பட்ட நாடி ஏட்டை மிக ஆழமாக ஆராய்ச்சி செய்யும்போது துல்லியமாக கண்டறிந்து விடலாம்.

நாடி பார்க்கும்போது ஒருவருக்கு ஓராண்டிற்குள் மரண கண்டம் இருக்கிறது என்பது தெரிந்தால், அதை அவரிடம் எப்படிச் சொல்வீர்கள்?
கண்டிப்பாக உண்மையை சொல்லிவிடுவோம். இதெல்லாம் மறைக்கக்கூடிய விஷயம் கிடையாது. பின்னாடி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், "ஏன் முன்னாடியே எச்சரிக்கவில்லை?" என்று நம்மைத்தானே கேட்பார்கள்.
அதனால், எந்த வருடம், எந்த மாதத்திலிருந்து எவ்வளவு காலம் வரை, எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை ஆழமாக எடுத்து சொல்வோம். மரணத்திற்கு ஒப்பான கண்டம் வரும்போது, நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது என்று கூறி, அதற்குரிய தீர்வுகளை, வழிமுறைகளை சொல்லிவிடுவோம்.

நாடி ஜோதிடத்தை வழிகாட்டியாக வைத்து கொள்ளலாமா ?
கண்டிப்பாக, நாடி ஜோதிடம் என்பது வழிகாட்டியே தவிர, பயமுறுத்துவது கிடையாது. வாழ்க்கையில் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல், பிரச்சினையில் இருந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். மகரிஷிகள் உங்களுக்கு நல்லதொரு அனுகிரகத்தை வழங்குவார்கள்

நம்பிக்கையோடு நாடி ஜோதிடத்தை அணுகுங்கள். பரிகாரம் என்ற பெயரில் நிறைய பணத்தைப் பிடுங்கி ஏமாற்றி விடுவார்களோ என்று பயப்படாதீர்கள். சில இடங்களில் மக்கள் ஏமாந்திருக்கலாம், ஆனால் எல்லாரும் அப்படிப்பட்டவர்கள் கிடையாது. சரியான நாடி ஜோதிடர்கள் தவறுகளை செய்ய மாட்டார்கள். வள்ளுவ சமுதாயத்தில் பிறந்த எங்களை போன்ற ஜோதிடர்களிடம் பார்த்தால், உங்களுக்கு சரியான தீர்வை நல்லபடியாக எடுத்துக் கொடுப்போம்.

சில பேருக்குத் தேடினாலும் நாடி (ஓலைச்சுவடி) கிடைப்பதே இல்லையே ?
அது அவர்களின் பிராப்தம் மற்றும் விதி. நாமாகவே ஓலையை எழுதப் போகிறோமா?. மகரிஷிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஓலையில் இருப்பதை நாம் படிக்க போகிறோம். ஏடு கிடைக்கவில்லை என்றால், அவர்களுக்கு இன்னும் இறை அனுகிரகமும், மகரிஷியின் ஆசியும் கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம். அந்தப் பிராப்தம் கூடி வரும்போது ஏடு தானாக கிடைக்கும்.

இந்த ஓலைச்சுவடிகளில் என்ன மொழியில் எழுதப்பட்டிருக்கும் ?
சுத்தமான தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். இந்த ஓலைச்சுவடிகளை பெற்றுப் படிப்பதற்கு, உன்னதமான குலத்தில் பிறந்ததற்கு புண்ணியம் செய்திருக்கிறேன். இதில் உள்ளவை அனைத்தும் புள்ளி இல்லாத 'வட்ட எழுத்துக்கள்' என்ற பண்டைய கால தமிழ் எழுத்துக்கள். அன்றைய எழுத்து வடிவங்களுக்கும், இன்றைய எழுத்து வடிவங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இந்த ஓலைகளை வாசிப்பதற்கு நீங்கள் எப்படி பழகினீர்கள் ?
இதற்காக நாங்கள் பல வருடங்கள் கடுமையான குருகுலப் பயிற்சி பெறுகிறோம். மருத்துவர் ஆவதற்கு 5 வருடங்கள் படித்து பயிற்சி பெறுவது போல, நாங்களும் 5 வருட காலம் எங்களுடைய குருகுலத்தில் தங்கி, ஒவ்வொரு பண்டைய காலத் தமிழ் வார்த்தையின் பொருள் என்ன ? என்பதை முறையாகக் கற்ற பிறகுதான் இதனை வாசித்து பலன் சொல்ல முடிகிறது.

நீங்கள் இதனை வாசிக்கும் போது தமிழில் தானே சொல்வீர்கள்?
ஆமாம், இதில் செய்யுள் வடிவத்தில்தான் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக
நீல நிற உருவெடுத்து உடுக்கையோடு நெற்றிக்கண் ருத்ராட்சம் கங்கை சிரசில் புலித்தோலும் கழுத்தில் அரவு சூலம் ஏந்தி பாவையனை இடப்பாகம் கொண்ட தேவன்...
இது சிவபெருமானைப் போற்றும் செய்யுள். ஆலகால விஷத்தை அமிர்தமாக உண்டதால் நீலகண்டனாக நீல நிற உருவத்தோடு இருப்பவர், கையில் திரிசூலமும் உடுக்கையும் ஏந்தியவர், நெற்றிக்கண்ணையும் ருத்ராட்ச மாலையும் கொண்டவர், புலித்தோலை ஆடையாக அணிந்தவர். பாவையனை இடப்பாகம் கொண்ட தேவன் - பாவை என்ற அன்னை பராசக்தியை தன் இடப்பாகத்தில் கொண்டு அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தரும் அந்த இறைவனின் பாதத்தை கும்பன் ஆகிய நான் நாள்தோறும் வணங்குகிறேன் என்று அகஸ்திய மகரிஷி பாடிய செய்யுள் இது.

ஒருவருடைய வாழ்க்கையை பற்றிச் சொல்வதற்கு முன்னால், மகரிஷிகள் இறைவனை செய்யுள் வடிவில் வணங்கிவிட்டுத்தான் பலன்களை எழுதத் தொடங்குவார்கள்.

இந்த ஓலைச்சுவடிகளில் நாங்களெல்லாம் தொட்டால் ஏதேனும் ஆகுமா?
இந்த ஓலைகளைப் பிறர் தொடக்கூடாது. ஏனெனில் இது மிகுந்த பவித்திரமானது, புனிதமானது. இந்த ஓலைகளை நாங்கள் எடுத்துப் பலன் சொல்லி முடித்து, மூடி வைத்த பின்பு, மறுநாள் மீண்டும் அதற்குரிய தூப தீபங்கள் காட்டி, வழிபாட்டு முறைகளைச் செய்த பிறகுதான் நாங்களே இந்த ஓலையைத் தொட முடியும்.

வாழ்க வளமுடன்! நன்றி, வணக்கம்!

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.