Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

இரட்டை குழந்தைகள்

04 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
இருவருக்கும் ஒரே ராசிதான் இருக்கும். அதிகபட்சமாக 10 நிமிடம் தான் வித்தியாசம் இருக்கும். லக்னத்திலும் மாற்றம் இருக்காது. அவர்களுடைய பலன் எப்படி இருக்கும் ?
ஒரு மனிதனுடைய கை பெருவிரல் ரேகையை கொண்டு தான் நாடி சாஸ்திரம் பார்க்க முடியும் என்று மகரிஷி சொல்கிறார். ரேகைதான் வாழ்க்கையினுடைய ரகசியங்களை திறக்கக்கூடிய சாவி. ஆண்களுக்கு வலது கை பெருவிரல் ரேகை, பெண்களுக்கு இடது கை பெருவிரல் ரேகை. வலது கை ரேகை சூரிய நாடி, இடது கை ரேகை சந்திர நாடி. அதனால்தான் பரமேஸ்வரனே பார்வதி தேவிக்கு இடது பாகம் கொடுத்து அர்த்தநாரியாக நிற்கிறார். இரட்டை குழந்தைகளுக்கு, அவர்களின் ஜாதகம் வேலை செய்யாது. அவர்களுடைய கர்மவினை தான் வழிநடத்தும்.

இருவருடைய கர்ம வினைகள் மாறுபாடாக இருக்குமா ?
குணாதிசயங்கள் கண்டிப்பாக மாறும். ஒருத்தர் நன்றாக படித்திருப்பார், இன்னொருவர் படிக்கவே மாட்டார். ஒருவருக்கு முறைப்படி திருமணம் நடந்திருக்கும், இன்னொருவர் காதல் திருமணம் செய்வார். ஒருவர் வெளிநாட்டில் வாழ்வார், மற்றொருவர் இங்கேயே நிலையான வேலை இல்லாமல், விவசாயத்தில் அல்லது அடிப்படை நிலை வேலையில் இருப்பார். இரண்டு பேரும் இரண்டு கோணங்களில் இருப்பார்கள். தங்களுக்குள்ளேயே ஒத்துப்போகாதவர்களாகவும் இருப்பார்கள்.

இரட்டை குழந்தைகள் திருமணத்திற்கு பிறகு, அவர்களுடைய வாழ்க்கை ஒரே மாதிரியாக செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? அல்லது மாற்றம் இருக்குமா?
ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், திருமணம் நிகழும்போது, கணவருடைய, மனைவியுடைய ஜாதகத்தின் தாக்கம் அவர்களுடைய வாழ்க்கையில் நுழைந்து, செயல்பட தொடங்குகின்றன. அவர்களுடைய கர்ம வினைகளுடன் சேர்கின்றன. இவையனைத்தும் இணையும் போது, வழிநடத்தலும் மாறுபடம். எந்த கர்மவினை ஆதிக்கமாக அல்லது இணைந்தவர்களின் கர்மவினை செயல்படுகிறதா என்பதை பொறுத்து, பலன்கள் மாறுபடும்.

அவர்களுடைய கர்ம வினைகள் கிட்டத்தட்ட ஒன்றுபோல இருந்ததால்தானே, இரண்டு பேரும் ஒரே குடும்பத்தில் பிறந்திருக்கிறார்கள்?
இது இரட்டை குழந்தைகளுக்கு மட்டும் பொருந்தாது. உங்களுடைய தாய் தந்தையாருக்கு, சகோதரன் கூட நீங்க ஏன் பிறக்கணும்? என்ன சம்பந்தம் ? ஆன்மாத் தொடர்பு (Soul connection) ஏதோ ஒரு ஜென்மத்தினுடைய பந்தத்தால் தான் நடக்குது. அதேபோல இரண்டு குழந்தைகள் ஒன்றாக பிறப்பதற்கும், ஆன்மாக்களின் தொடர்பும். ஏதோ ஒரு ஜென்மத்தினுடைய பந்தம்தான் காரணம்.

கர்மா ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது விதி கிடையாது. கர்ம வினைகள் மாறுபட்டிருக்கும். ஆனால், இருவரும் ஒரே குடும்பத்தில் பிறந்து இன்பத்தை, துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை அவர்களுடைய கர்மாதான் தீர்மானிக்கிறது.
நிறைய பேர் கேட்பது, ‘என்னங்க, இந்தக் கர்மா என்ற விஷயத்தை வைத்து தொடர் நாடக நிகழ்ச்சி போன்று கொண்டு போகிறீர்களே ?’. எல்லாவற்றையும் தீர்மானிப்பது கர்மாதான். வேறு ஒன்றும் கிடையாது. அதைத்தான் நாம் பலமுறை சொல்கிறோம்.

கர்மா என்ற வரும்போது, கடவுளே கூட குறுக்கே நிற்க மாட்டார். ஏனென்றால், கடவுளும் கர்ம விதிக்கு கட்டுப்பட்டவர் தான்..

இருவருக்கும் ஜாதகம் ஒன்றுதான் என்றாலும், கர்மா பொறுத்துத்தான் வாழ்க்கை அமையுமா ?
ஜாதகத்தை வைத்தே முழு பலன்களை கணிக்க முடியாது. இப்போது நான் நாடியும் படிக்கிறேன், ஜோதிடமும் பார்க்கிறேன். ஜோதிடத்தின் அடிப்படைகள் தெரிந்திருப்பதால், அதைப் பற்றிய விஷயங்கள் எனக்கு தெரியும். ஆனால், ஜாதகத்தை ஆழமாக ஆராயும்போது, அவர்களுடைய தசாபுத்தி பலன்களும், கோச்சார பலன்களும் சில நேரங்களில் இதற்கு என்ன பலன் சொல்ல வேண்டும் என்று நம் புத்திக்கு எட்டாது. சில நேரங்களில் நாமே எதையும் யோசிக்க முடியாத (Blank) அளவுக்கு மனதில் குழப்பம் ஏற்படும். அப்படிப்பட்ட இடங்களில் தான் மகரிஷி சரியான தீர்வை கொடுப்பார்.

நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடியது நாடி சாஸ்திரம். ஒருவருக்கு மாரகாதிபதி தசை நடந்தால், உயிருக்கு ஆபத்தான காலகட்டம் என்று கூறும்போது, மகரிஷி நாடியில் மிகவும் எளிதாக அந்த விஷயத்திற்கான முடிவை கூறிவிடுவார். அதாவது ‘இன்னும் ஐந்து வருடங்கள் இவர் எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக வாழ்வார்’ என்று நாடியில் வரும்போது, நமக்கு என்ன தோன்றும்? ‘என்னடா, ஜாதகத்தைப் பார்த்து இவ்வளவு விஷயங்களை நாம் யோசித்துக்கொண்டிருக்கிறோம். மகரிஷி இப்படி சொல்கிறாரே!’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால், மகரிஷி சொல்வதுதான் நடக்கும்.

இரட்டை குழந்தைகள் பிறக்க அவர்களுடைய கர்மாதான் காரணமா?
அதில் எந்த மாற்றுக்கருத்து கிடையாது. இரட்டையர்களில் மிக அன்யோனியமாக அல்லது எதிரெதிரான குணங்களுடனும் இருப்பார்கள். ஆகவே, அதற்கு அவர்களுடைய ஜாதகம் மட்டும் காரணம் கிடையாது. ஒருவருக்கு ஏழரைச் சனி வந்தாலும், மற்றொருவருக்கும் ஏழரைச் சனி வரும். ஒருவருக்கு யோகாதிபதி தசை நடந்தாலும், மற்றொருவருக்கும் யோகாதிபதி தசை நடக்கும். ஒருவருக்குக் கர்மாதிபதி தசை நடந்தாலும், மற்றொருவருக்கும் அதே கர்மாதிபதி தசைதான் நடக்கும்.

கிரக நிலைகள் ஒன்றுபட்டிருக்கும் போது, அவர்களுடைய குணங்கள் மட்டும் எப்படி மாறுகின்றன என்பதை நாம் யோசிக்க வேண்டும். எப்படி இரண்டு பேரும் இரண்டு கோணங்களில் இருக்கிறார்கள்? உணவுப் பழக்கத்திலிருந்து அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகள், அணுகுமுறைகள் என எல்லாவற்றிலுமே வேறுபட்டு இருக்கும்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.