Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

மனிதனின் பிறப்பு, இறப்பு

05 Nov 2026 4 நிமிட வாசிப்பு வீடியோ
நீங்கள் வரக்கூடிய மக்களுக்கு சொல்கின்ற பரிகாரங்கள் எப்படி அமைந்திருக்கும் ? கோயில் வழிபாடுகள், கோயில்களுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டுமா ? அகஸ்தியர் எந்த கோயில்களில் வழிபட்டார் ?
பரிகாரங்களை "நான் சொல்லவில்லை". இதை ஏன் நான் திரும்ப சொல்கிறேன் என்றால், எங்களுடைய சொந்த அறிவு அதில் எதுவுமே இல்லை என்பது தான் உண்மை. மகரிஷி, கர்மாவின் அடிப்படையில் உங்களுக்கு பரிகாரங்களை சொல்கிறார். எல்லாருக்கும் ஒரே மாதிரி பரிகாரம் வராது. கர்மாவும் பலவிதமாக பிரிக்கப்படுகிறது.

சாபங்களில் பல வகைகள் உண்டு:

• பெண் வழி சாபம்
• சிசு வழி சாபம் (கருவழியில் வரும் சாபம்)
• ஒரு கரு தோன்றி அதை அழிக்கும் போது அதன் வழி வரக்கூடிய சாபம் (கருக்கலைப்பு தோஷம்)
• தாய் சாபம் (பொதுவாக எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு சாபம் விட மாட்டாள். ஆனால், சில தாய்மார்கள் மிகவும் மனம் நொந்தால், தன் குழந்தைக்குச் சாபம் விடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது).
• பருவ பெண்கள் வழியில் வரக்கூடிய சாபம்
• மனைவியால் ஏற்படக்கூடிய சாபம் (திருமணத்திற்குப் பிறகு)
• பெற்ற மகள் வழி வரக்கூடிய சாபம்
• சர்ப்பங்கள் வழி வரக்கூடிய சாபம் (சர்ப்ப வதம்)
• பங்காளி வழி வரக்கூடிய சாபம்
• குலதெய்வ வழிபாடு இல்லாமல், குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போவதனால் வரக்கூடிய சாபம்
• முனி சாபங்கள், ரிஷிகளுடைய சாபங்கள்
• நம்முடைய பித்ருக்களுடைய (முன்னோர்களின்) சாபங்கள் என நிறைய இருக்கின்றன.

அதற்கு ஏற்ப, இந்த ஜென்மத்தில் தண்டனைகளும் உண்டு. ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை என்றால், அது சம்பந்தப்பட்ட சாபங்கள் இருக்கும். சொத்து அல்லது தாய், தந்தை வழி பிரச்சினைகள் வருகிறது என்றால் நம்முடைய பித்ருக்கள், முன்னோர்களுடைய வழி சாபம் இருக்கும். இப்படி ஒவ்வொன்றையும் மகரிஷி இணைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் நாடி பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.

மகரிஷி சொல்லியிருப்பார்கள் "இந்த கோயில் இவ்வளவு ஆண்டு பழமையானது" என்று. எல்லாமே புண்ணிய ஸ்தலம் ஆகிவிடாது. இன்றைக்கு ஒரு இடத்தில் ஒரு சிலையை வைத்து வழிபடுவதெல்லாம் பழமையான கோயில் ஆகிவிடாது. மகரிஷிகள் சொல்லியிருக்கக்கூடிய ஆலயங்கள் எல்லாமே 2000 - 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஸ்தலங்களை மட்டும்தான்.

உதாரணத்திற்கு திருவாரூர் தியாகராஜர் கோயில் என்றால், அதை தசரத மன்னன் வந்து வழிபட்டதாக தலபுராணம் சொல்கிறது. ராமனுடைய காலம் எவ்வளவு முற்பட்டது ? தசரத மன்னனுடைய காலகட்டங்கள் எவ்வளவு பழமையானது? அதனுடைய வரலாற்றை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

வைத்தீஸ்வரன் கோயில். நவகிரக ஸ்தலங்களில் அங்காரகனுடைய ஸ்தலம் (செவ்வாயினுடைய ஸ்தலம்) என்பது எல்லாருக்கும் தெரியும். ராமாயண காலத்தில் ஜடாயுவினுடைய இறக்கை அங்கே விழுந்ததாக சொல்வார்கள். ராமாயண காலகட்டம் எவ்வளவு முற்பட்டது?.
ஐயாவாடி (ஐவர்பாடி) பிரத்தியங்கிரா கோயில் - பாண்டவர்கள் வழிபாடு பண்ணியதாகவும், ராமாயணத்தில் இந்திரஜித் தோல்வியிலிருந்து வெற்றியை பெறுவதற்காக நிகும்பலா யாகம் செய்ததாக புராணங்களில் சொல்லப்படுகிறது. இதுபோன்ற பழமையான கோவில்களை மட்டும்தான் மகரிஷி பரிகாரங்களாக சொல்லியிருக்கிறார்கள். அதுவும் அந்த இடங்களுக்கு போவதற்கு, எல்லாருக்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்காது. விஷயம் தெரிந்தும் போகாதவர்கள் இருக்கிறார்கள். அங்கே போய் முழுமையாக இறைவனை வணங்கும் பொழுது, பலன்கள் உண்டு.

அகஸ்தியருக்கு என்று தனியாக கோவில்கள் அமைந்திருக்கிறதா? நீங்கள் அகஸ்தியருக்கு கோவில் அமைக்கிறீர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். அதே மாதிரி இதற்கு முன் யாராவது அமைத்திருக்கிறார்களா ?
மற்றவர்கள் அமைத்தை பற்றி பேச விரும்பவில்லை. என் நோக்கம், அகஸ்தியர் ஒரு ஞானகுரு. ஞானம் எல்லாருக்கும் போய் சேர வேண்டும் என்ற சேவை மனப்பான்மையிலும், பொதுமக்கள் யாவரும் நன்மை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்க நினைத்திருக்கிறேன். கண்டிப்பாக அகஸ்திய பெருமான் அதை நல்லபடியாக அமைத்துக் கொடுப்பார்.

தமிழ்நாட்டில் அகஸ்தியருக்காக நிறைய கோவில்கள் இருக்கின்றன. சென்னையிலிருந்து பொன்னேரி பக்கத்தில் பஞ்செட்டி என்று இடம் இருக்கிறது. அகஸ்திய பெருமானே இங்கு வந்து 5 யாகங்கள் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. யாகம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக, அம்பாளே முன்னின்று காவலாக இருந்ததாக தலபுராணம் கூறுகிறது. அதற்கான ஆதாரங்கள் அந்த கோவிலிலே கொடுத்திருக்கிறார்கள்.

தென்பகுதியில் அகத்தியம்பள்ளி என்று ஊர் இருக்கிறது. அங்கேயும் அகத்தியர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்கிறோம். குற்றாலத்தில் அகஸ்தியருக்கான கோவில்கள் இருக்கின்றன. வெளியில் தெரியாமல் பல இடங்கள் இருக்கின்றன. விரைவில் அவர் எங்கெல்லாம் சென்று வழிபட்டார் என்பதை கொண்டு வருவோம்.

அகத்தியர் வழிபட்ட அல்லது சென்ற இடங்களில் ஆதாரங்கள் இருக்கிறதா ?
அங்கேயுள்ள தலபுராணங்களே அதற்கான வரலாற்று சான்றுகள். உதாரணத்திற்கு, ஒரு தம்பதியினருக்கு நீண்ட காலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவர்கள் குழந்தை வரம் பெற வேண்டும் என்பதற்காக ஓலையில் ஒரு கோயில் சொல்லப்பட்டிருந்தது. அது கும்பகோணத்தில் இருக்கக்கூடிய கருவளர்ச்சேரி என்ற ஊர். அந்த ஊர் எல்லாருக்கும் தெரியாது, ஒரு சிறிய கோயிலாக இருக்கும். அங்கே, அகத்திய பெருமானும் லோபமுத்திரா தேவியும் (அகஸ்தியரின் மனைவி) இறைவனுக்கு பூஜை பண்ணியதாக புராணங்கள் சொல்கின்றன. அகத்தியர் வழிபட்ட கோவில்தான் என்று ஓலையில் நேரடியாக சொல்ல மாட்டார். நம்மளுடைய பிரச்சினைக்கும், கர்மாவிற்கும் தகுந்தவாறு கோவிலை மகரிஷி சொல்லுவார் என்பது சூட்சுமம்.

அகத்தியர் ஓலைச்சுவடிகளில் எழுதின வார்த்தைகள் எப்படி இருக்கும் ?
இப்போது நம்மிடம் இருக்கக்கூடிய சுவடிகள் எல்லாமே தூய தமிழ்தான். "தமிழ் தந்தை", தமிழ் என்ற சொல்லுக்கு சொந்தமானவர் அகத்தியர். இன்றைக்கு அதெல்லாம் மறைக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் எழுதின, நாம் படிக்கின்ற ஓலைச்சுவடிகள் எல்லாமே தமிழ் எழுத்து தான். இன்றைய காலத்தில் உள்ள எழுத்துக்கும், பண்டைய கால எழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரு கல்வெட்டில் பார்த்தால், 800 வருடங்களுக்கு முன்னாடி என்ன அட்சரங்கள் (எழுத்துக்கள்) இருக்கிறதோ, அதற்கு முன்னதாக இருக்கக்கூடிய எழுத்துக்கள் இவை. சுத்தமான தமிழ் எழுத்து, வட்டெழுத்து என்று சொல்லுவோம்.

வட்டெழுத்து உங்களுக்கு எளிதாகப் புரிந்துவிடுமா ?
கண்டிப்பாக புரிந்துவிடும். ஓலைகளில் புள்ளி இல்லாத வட்டெழுத்துக்களாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ஏனென்றால், ஓலைகளில் புள்ளிகள் வைத்தால் (எழுத்துக்களுக்கு மேல் புள்ளி வைத்தால்) அந்த ஓலைகள் ஓட்டையாகிவிடும். இதை முழுமையாக கற்றுக்கொண்டவர்கள் தாராளமாக படிக்கலாம்.

இதில் இருக்கிற எழுத்துக்கள் அழகான வடிவத்தில் இருக்கும். ஒரு ஓலையில் ஒரு பக்கத்தில் 14 வரிகள் இருக்கும். ஆக முன்பக்கம் 14, பின்பக்கம் 14 என மொத்தம் 28 வரிகள் இருக்கின்றன. ஒரு ஓலை என்பது ஒரு மனிதனுடைய முழு வாழ்க்கையாகும்.

ஒரு வரி என்பது ஒரு பக்கத்தின் பலனை குறிக்கும். இதையெல்லாம் கற்று கொள்வதற்கு நிறைய பயிற்சிகள் இருக்கின்றன. முதலாவது குரு சேவை செய்ய வேண்டும். ஐந்து வருடம் அங்கே இருந்து பழக வேண்டும். ஒரு மருத்துவ படிப்புக்கு 5 வருடங்கள் படிக்கிறீர்கள். இந்த எழுத்துக்களை கற்றுக்கொண்டு, அதன் பிறகு அதன் பொருளை உணர்ந்து நாம் மக்களுக்கு படித்து சொல்ல வேண்டும். அதற்கு அவருடைய ஞானமும், குருவின் ஆசீர்வாதமும் ரொம்ப முக்கியமாக இருக்கிறது.

இந்த ஓலைச்சுவடிகள் எத்தனை ஆண்டுகால பழமையானவை?
குறைந்தது 3000 ஆண்டுகள். ஆனால், எல்லார் கையிலும் இருக்கக்கூடிய ஓலைகள் அசல் (orginal) கிடையாது. இது சோழர்களுடைய காலகட்டத்தில், பழமையான மூல ஓலையிலிருந்து ஒவ்வொன்றாக பார்த்துப் பிரதி செய்யப்பட்டது. இவையெல்லாம் மீண்டும் ஓலையில் எழுதப்பட்டவைதான். ஒவ்வொருத்தவர்களுக்கும் எழுதும் பொழுது, ஒரு பிரதி பண்ணும் பொழுது, ஒருத்தருக்கு 2 – 3 முறை எழுதிய ஓலைகள் எல்லாம் இருக்கின்றன. என்னிடம் இருக்கின்ற அதே ஓலையின் பிரதி உங்களிடமும் இருக்கலாம். எங்களுடைய ஆசிரமங்களில், எங்களுடைய வள்ளுவ சமுதாயத்தில் இருக்கக்கூடியவர்களிடம் வேறொரு இடத்தில் அந்த ஓலையின் நகல் இருக்கலாம்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.