Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

கேள்வி பதில்கள் - 3

03 Nov 2026 3 நிமிட வாசிப்பு வீடியோ
இன்றைக்கு விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. நாடி மூலம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தால், பிரச்சினைகள் கண்டிப்பாக வராதா ?
ஜாதகப் பொருத்தத்தை 2-3 விதங்களில் பார்க்கலாம். நட்சத்திரப் பொருத்தம், கிரகப் பொருத்தம் போன்றவை உள்ளன. பொருத்தமே பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஏழாவது காண்டம் என்பது திருமண காண்டம்.

சிலருக்கு 35 வயது வரை திருமணம் பற்றிய எண்ணமே வராமல் இருக்கலாம். அவர்களுடைய மனநிலைக்கும் ஏற்ப கிரக நிலைகள் ஓலையிலும், ஜாதகத்திலும் இருக்கும். அதற்கான தீர்வு ஜாதகத்தில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், அதற்கான பரிகாரம் அல்லது தீர்வு ஓலையில் கிடைக்கும்.

நீ என்ன பாவம் செய்தாய்? திருமணம் செய்து மனைவியை கொடுமைப்படுத்தி பிரிந்த சாபங்கள் இருக்கலாம். திருமணம் செய்வதாக வாக்குக் கொடுத்து, சுகபோகத்தை அனுபவித்து, ஒரு குழந்தையை பிறந்த பின்னர், ‘நீ எனக்கு தேவையில்லை’ என்று பிரிந்திருக்கலாம். அந்த ஏமாற்றத்தை ஏற்க முடியாமல், குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சாபம், பாவங்களும் தொடரலாம். இவ்வாறு பல்வேறு பாவங்கள் இருக்கலாம்.

நாயை அடிப்பதே பாவம். சர்ப்பத்தை கொல்வதும் தோஷமாக மாறுகிறது. குறிப்பாக 2 சர்ப்பங்கள் இணைந்திருக்கும் நிலையில் அவற்றை துன்புறுத்துவது பெரிய பாவமாகும்.

ஓலையை பார்த்து கல்யாணம் செய்தால் பிரச்சினைகள் வராமல் இருக்குமா?
பிரச்சினை வரும். நாடி ஜோதிடம் என்பது ஆயுள் பலன்களாக இருக்கிறது. ஒருவர் நாடி பார்க்கின்ற வயதிலிருந்து அவரது இறப்பு காலம் வரை பலன்கள் கூறப்படுகின்றன. உதாரணமாக, ஒருவர் 35 வயதில் நாடி பார்த்தால், 37 வயதில் கணவன்–மனைவி வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும் என்று காரணமும் மகரிஷி கூறிவிடுகிறார். 'இந்த பெண்ணைத்தான் நீ திருமணம் செய்யப் போகிறாய். இப்படித்தான் உன் வாழ்க்கை அமையும்’ என்பதையும், அதற்கான தீர்வும் கொடுத்து விடுகிறார்.

இறைவன் நம் கர்மாவுக்கு ஏற்பவே வாழ்க்கையை அமைத்திருக்கிறார் என்று சொல்கிறீர்கள், அப்படியிருக்கையில், நாம் ஏன் ஜாதகம், நாடி ஜோதிடம் போன்றவற்றை நம்பிப் பார்க்கிறோம் என்பது எனக்கு புரியவில்லை.
கடவுளுக்கு சாபம் இருக்கிறதா இல்லையா?
மகாபாரதம் என்ற இதிகாசம் இன்றைய மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. அந்த மகாபாரதத்தில் கிருஷ்ணன் பரமாத்மாவாக இருக்கிறார். அவருக்கே காந்தாரி அரசி சாபம் கொடுக்கிறார். கடவுளுக்கே சாபம் அளிக்கப்படுகிறது. அவர் தன்னைப் பற்றி ‘நானே சிவன், நானே விஷ்ணு, நானே பிரம்மா’ என்று கூறுகிறார்.

மகாவிஷ்ணு மிகவும் ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வாழும் கடவுளாக கருதப்படுகிறார். அவர் மகாலட்சுமியுடன் அனந்த சயனத்தில் இருக்கும்போது, பிருகு மகரிஷி அங்கு வருகிறார். அவர் வருவதை மகாவிஷ்ணு பார்த்துவிடுகிறார், அதை கவனிக்காதது போல இருக்கிறார். இதனால் கோபமடைந்த பிருகு மகரிஷி, மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைக்கிறார். உடனே, மகாவிஷ்ணு பிருகு மகரிஷியின் காலை பிடித்து வணங்குகிறார். இதை பார்த்து மகாலட்சுமி கோபமடைகிறார்.
"உன் மார்பகத்தில் நான் இருக்கிறேன், என்னை அவர் எட்டி உதைக்கிறார், நீ அவரை தொட்டு வணங்குகிறாயே". ஏன் அவர் தொட்டு கும்பிடுகிறார் ? பிருகு மகரிஷி கால் கட்டைவிரலில் ஒரு கண் இருக்கும். பிருகு மகரிஷி உடனே மகாலட்சுமிக்கே சாபத்தை கொடுத்துவிடுகிறார். அதனால் மகாலட்சுமி பூலோகத்தில் பிரிந்து வந்து துன்பங்களை அனுபவிக்கிறார் என்பதாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.

அதே மாதிரி பரமேஸ்வரனுக்கும் சாபங்கள் வந்திருக்கின்றன. இப்படி எல்லா கடவுள்களுக்கும் சாப பாவங்கள் இருக்கும். 'மனிதனும் தெய்வமாகலாம்' என்ற உதாரணத்திற்கு வந்து ராமபிரான் வாழ்க்கையில் அனுபவிக்காத கஷ்டங்களா? ஏன் வனவாசம் போனார் ? ஏன் அவரால் நாட்டை ஆள முடியவில்லை? கடவுள்களுக்கும் சாபம் உண்டு என்பது தெரிகிறது.

நம்முடைய சாபத்திற்கு எதிராக கடவுள் தலையிட மாட்டார்கள் என்பதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். பலர், ‘நான் இவ்வளவு தெய்வங்களை வணங்குகிறேன், இவ்வளவு கோவில்களுக்கு செல்கிறேன். ஆனால் எனக்கு எந்தப் பலனும் இல்லை, தெய்வங்களின் அனுக்கிரகம் கிடைக்கவில்லை. தெய்வமே இல்லை, இனிமேல் கோவிலுக்கே போக மாட்டேன்’ என்று விரக்தியுடன் பேசுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லவது, நீ அனுபவிப்பது உன் கர்ம வினையின் பலன் தான். உன் பாவம் அல்லது கர்மமே உன் வாழ்க்கையை வழிநடத்துகிறது. தெய்வம் உன்னை வழிநடத்தவில்லை. கர்மா என்றால் தெய்வம் கூட நிற்க மாட்டார்.

எல்லோரும் சித்தர்களை வீட்டிலே பிரார்த்தனை செய்யலாமா? தினமும் சித்தர் போற்றி கேட்பதாலே நமக்கு அனுக்கிரகம் கிடைக்குமா?
நீங்கள் கேட்ட கேள்வியிலேயே விடை இருக்கிறது.
"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்".
இதை அகத்திய முனிவர் சொல்லியிருக்கிறார். உன் மனசை தூய்மையாக வைத்துக்கொள், உன்னோடு நான் இருக்கிறேன். வெளித்தோற்றத்தில் சுத்தத்தை கடைப்பிடிப்பது பலன் கிடையாது.

எல்லோரும் ஜீவ சமாதிகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அங்கே அவர்களுடைய சுவாசம் இருப்பதாக சொல்கிறார்கள். அதை நாம் அனுபவித்து உணர்வது மிகவும் நல்ல விஷயமா ?
குரு அருள் இல்லாமல் திருவருள் இல்லை. மகரிஷி கூறுவது, தெய்வத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் இடையில் இருப்பவர் குரு தான். எந்த ஒரு காரியத்தையும் குரு மூலமாக செய்வது முழுமையாக, சிரத்தையாக நிறைவேறும்.

‘நானாகவே ஒரு விஷயத்தை செய்கிறேன், புத்தகங்களை படித்து தெரிந்துகொள்கிறேன், பிற ஊடகங்களை பார்த்து கற்றுக்கொண்டு பயிற்சி செய்கிறேன்’ என்பது முழுமை அல்ல. ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற வரிசையில் தெய்வத்திற்கு நான்காவது இடம். தெய்வத்தை வணங்குவதற்கும் குரு அருள் தேவை என்று அகத்திய முனிவர் கூறியுள்ளார்.

மனதை சுத்தமாக வைத்து, ஒரு சொம்பில் தண்ணீரை வைத்து, ஒரு ஊதுபத்தி ஏற்றி வைத்து, அவர்களை மனமாரப் போற்றி பாடல் கேட்டாலே போதுமானது. அதற்கான ஆசிகள் கண்டிப்பாக கிடைக்கும்.

நானும் அதை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எனக்கும் ஆசிகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. கண்டிப்பாக உங்களுக்கும் கிடைக்கும்.

NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.