Naadi Astro உங்கள் நட்சத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறது
ஆன்மீக வலைப்பதிவு

தொழில் காண்டம்

05 Nov 2026 7 நிமிட வாசிப்பு வீடியோ

இன்றைய காலகட்டத்தில் எல்லாருக்கும் முக்கியமானது தொழில். எல்லாருமே நல்லபடியாக, கஷ்டம் இல்லாமல், நிம்மதியோடு வாழ வேண்டும். இதற்கு முதல் மூலக் காரணமாக இருக்கக்கூடியது பணம். அதற்கு முதலில் நிரந்தரமான ஒரு உத்தியோகம் (வேலை) வேண்டும். தொழில் காண்டத்தில் வேலைவாய்ப்பு, உத்தியோகம், சுயதொழில் இவையெல்லாம் அடங்கும்.

தற்கால சூழலில் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை. AI (செயற்கை நுண்ணறிவு) இப்போது ரொம்பவே பிரபலமாகிக் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி மகரிஷி முன்னரே சொல்லியிருக்கிறாரா?
கட்டாயமாகச் சொல்லியிருக்கிறார்கள். 10-வது காண்டத்தை படிக்கும் பொழுது, அவர் என்ன படித்திருக்கிறார், படிப்புக்கான வேலை கிடைக்கிறதா, அவருடைய கர்ம பலனின்படி சரியான வேலையில் இருக்கிறாரா ? எந்தத் துறையை தேர்ந்தெடுத்தால் வெற்றி அடைய முடியும்? அந்த வேலையில் எவ்வளவு காலம் நிரந்தரமாகப் பணியாற்றுவார்? இங்குள்ள அல்லது அந்நிய தேசங்கள் சார்ந்த நிறுவனங்களாக இருக்குமா? எப்பொழுது வேலை கிடைக்கும் என்ற விஷயங்கள் தெரியவரும்.

ஒருவரின் தொழிலுக்காக கைரேகை அல்லது ஜாதகம் இருந்தால் பார்ப்பீர்களா?
முதலில் 'பொதுகாண்டம்' என்பது மிக அவசியம். பொதுகாண்டம் என்பது அந்த 12 காண்டங்களுடைய சுருக்கமாகும். பொதுகாண்டம் இல்லாமல் எந்த ஒரு காண்டத்தையும் நேரடியாகப் பார்க்க முடியாது. ஏற்கனவே பொதுகாண்டம் பார்த்தவர்கள், அந்த நோட்டுப் புத்தகத்தை அல்லது அதனுடைய குறிப்புகளைகொடுத்தால், அதை வைத்து நேரடியாக தொழிலைப் பற்றிப் பார்த்துவிடலாம். புதிதாகப் பார்க்க வந்தால், முதலில் பொதுகாண்டம் பார்த்துவிட்டு, அதன் பிறகு தொழில் காண்டத்தை பார்க்கும் போது தொழிலைப் பற்றிய முழு விவரங்களும் அதில் அடங்கிவிடும்.

இன்றைக்கு நிறைய பேர் வேலையில் அங்கீகாரம் இல்லாமல் இருக்கிறார்கள். மூன்று வருடத்தில் பதவி உயர்வு (Promotion) கிடைக்கும் என்று சொல்லியிருப்பார்கள், ஆனால் கிடைப்பது இல்லை. இன்றைய காலகட்டத்தில், 'வேலையைக் காப்பாற்றிக் கொண்டால் போதும்' என்ற நிலையில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விருப்பமில்லாத வேலை பார்ப்பவர்கள் பலர் உண்டு. எந்த வேலை சரியான வளர்ச்சியைத் தரும், எப்போது பதவி உயர்வு கிடைக்கும், பொருளாதார நிலையை விளக்கமாக தெரிந்து கொள்ளலாம். ஆணாக இருந்தால் வலது கைரேகை, பெண்ணாக இருந்தால் இடது கைரேகை.

மகரிஷிகள் இப்போது இருக்கக்கூடிய AI பற்றிச் சொல்லியிருப்பார்களா ?
சொல்லியிருக்கிறார்கள்.

எப்படிப் பண வசதிக்கு ஏற்ப வாழ்வது போன்ற தீர்வு நாடி ஜோதிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதா?
நான் ஐந்தாவது தலைமுறையாக நாடி ஜோதிடத்தைப் பார்த்து வருகிறேன். ஒருவருடைய நாடியை படிக்கும் பொழுது, அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையினுடைய படிப்பு என்னவாக இருக்கும், எந்தத் துறையில் குழந்தை பயணிக்கப் போகிறது, என்ன மாதிரியான வேலை, மருத்துவம் சார்ந்ததா அல்லது இன்றைய காலகட்டத்திற்கு ஏற்பப் புதுமையானதா என்பதை மகரிஷி சொல்லியிருக்கிறார்.

எங்களுடைய பெரியவர்களிடம் பார்த்தவர்கள் "உங்களுடைய தாத்தாவிடம் பார்த்தேன், உங்களுடைய அப்பாவிடம் பார்த்தேன். அன்றைக்கே நான் இது போன்ற துறையில்தான் இருப்பேன், வேலை நிமித்தமாக அந்நிய தேசம் பயணிப்பேன் என்று சொல்லியிருந்தார்கள்" என்கிறார்கள். தொழில்நுட்ப வளர்வதற்கு முன்னாடியே மகரிஷி இன்றைக்குத் தொழில்நுட்பம் உண்டு என்பதைப் பேசியிருக்கிறார்.

நாடிப் படிக்கும் பொழுது, 'கால நுட்பம்' 'கால புதுமை' என்று வரும். அதாவது, நூதனமான, புதுமையான, அவருடைய காலகட்டத்திற்கு ஏற்ப அதிநுணுக்கமான உத்தியோகம் என்று சொல்வார்கள். அதிநுணுக்கங்கள் என்பது இன்றைய தொழில்நுட்பம், மென்பொருள், கணினி சம்பந்தப்பட்டது எல்லாமே அடங்கியிருக்கிறது.

அதேபோல, 'ஔஷத பிடகன்' என்று ஒரு வார்த்தை. பிடகன் என்றால் 'மருத்துவர்' என்று அர்த்தம். "இந்தக் குழந்தை பிடகன் ஆவார்" என்று சொல்லியிருக்கிறார். அதில் காலகட்டத்திற்கு ஏற்பத் 'தந்தம்' சம்பந்தப்பட்டது (தந்தம் என்றால் பற்கள் சார்ந்த விஷயம்), அதே மாதிரி 'தந்தி' சார்ந்தது (தந்தி என்றால் நரம்பு சார்ந்த விஷயம், எலும்பு சார்ந்த விஷயம்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்போது பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் எப்படி, என்ன மாதிரியான துறையில் இருப்பார்கள் என்பதையும் மகரிஷி சொல்லியிருக்கிறார்.

எல்லா காலத்திற்குமே இது பொருந்துமா?
கட்டாயமாக உண்டு. இதை 'நவீனம்' என்கிறோம். மகரிஷிகள் இவை எல்லாவற்றையும் உணர்ந்தவர்கள். அடுத்த தலைமுறை எப்படி வாழப்போகிறது, அடுத்தடுத்து இந்த நாடுகளில் நாம் எப்படிப் பயணிக்கப் போகிறோம் என்பதையெல்லாம் மகரிஷிகள் தெளிவாகத் தங்களுடைய ஞான சிந்தனையில் உணர்ந்து, நம்முடைய பலன்களை எழுதி வைத்த இருக்கிறார்கள்.

சிலருக்கு வேலை பிடிப்பதில்லை, உதாரணத்திற்கு, "அரசு வேலை தான் வேண்டும்" என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் IT நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். உங்களிடம் அதற்கான தீர்வு கிடைக்குமா? பரிகாரங்கள் இருக்கிறதா? அல்லது தலையெழுத்து என்று விட்டுவிட வேண்டுமா?
இன்றைக்கு நிறைய பேர் வேலை கிடைக்கவில்லை என கஷ்டப்படுகிறார்கள். வேலை கிடைத்த பிறகும் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் (Survive) கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால், உழைப்பும், தகுதியும் இருந்தாலும் வெற்றி பெற முடிவதில்லை. அதற்கு மகரிஷி எதனால் இது போன்ற பிரச்சினையை அனுபவிக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கிறார். இதற்கும் கர்மாவிற்கும் சம்பந்தம் இருக்கிறது. அந்த கர்மா என்ன என்பதை மகரிஷி தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் கர்ம வினையை நாம் முழுமையாகத் தெரிந்து, அதற்குரிய ஆலயங்கள் மற்றும் பூஜை முறைகளை நாம் செய்து கொள்ளும் பொழுது, அனுபவரீதியாகப் பலருடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைத் தந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

நாடியில்,"இவர்களுக்கு ஆசைப்படுகின்ற வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை. இதுதான் விதி, பரிகாரமும் இல்லை" என்று எழுதப்பட்டிருக்குமா?
நாம் ஆசைப்படுவது எல்லாமே எல்லாருக்கும் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆசை என்பது எல்லா மனிதர்களுக்கும் உண்டு. ஆனால், அந்த ஆசை நியாயமானதா என்ற கேள்வி இருக்கிறது. மகரிஷி சொல்வது, நம்முடைய கர்ம பலன்தான் நம்முடைய ஜாதகம். அதற்கேற்ப, நமக்கு எது நிரந்தரமான தொழில், எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தால் ஜெயிக்க முடியும் என்பது இருக்கிறது. அதை விட்டுவிட்டு, "எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது, இதில் ஜெயிப்பேனா?" என்று கேட்டால், கட்டாயம் ஜெயிக்க முடியாது.

இன்றைக்குப் படித்தவர்கள் பலர் தாங்கள் படித்த துறையிலே வேலை பார்க்கிறார்களா? தங்களுடைய படிப்பை விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா? சிலர் அப்பா அம்மாவினுடைய கட்டாயத்தினால் படிப்பைப் படித்திருக்கலாம், ஆனால் அவர்களுக்கு விருப்பமே இல்லாமல் இருந்திருக்கும். சிலர் படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறார்கள். இவை எல்லாமே நம்முடைய கர்மாவோடு தொன்றுதொட்டு வரக்கூடிய விஷயமாக இருப்பதனால், நம்முடைய விருப்பப்பட்ட கல்வி அமைப்பு இருந்தால், "இருக்கிறது" என்று மகரிஷி சொல்லிவிடுவார்.
ஒருவேளை இல்லையென்றால், "உன்னுடைய துறை இதுதான், இதை நோக்கிப் போனால் தான் ஜெயிக்க முடியும். அதன்பிறகு பல யோகங்களை அனுபவிக்கக்கூடிய அமைப்பு இருக்கிறது" என்பதையும் மகரிஷி தெளிவாகச் சொல்லிவிடுவார்.

==============================================================================

எல்லாருக்குமே பொருந்தக்கூடிய, தொழில் பற்றிச் சொல்லுங்கள்.
எல்லாருக்குமே தொழில் என்பது ரொம்ப முக்கியமானது. ஏனென்றால், நாம் தற்சார்போடு, தன்னிறைவோடு வாழ வேண்டும். பொருளாதாரம். பணம், வேலையும் என்பது அடிப்படையாக இருக்கிறது. கட்டிய மனைவி கூட நம்மளை மதிக்க வேண்டும் என்றால், நமக்கென்று ஒரு நிரந்தரமான தொழில், சம்பாத்தியம் இருக்க வேண்டும்.

அடுத்த 5 வருட காலங்கள் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வேலை என்பது சவாலாகவே இருக்கும். மகரிஷி சொல்லக்கூடிய 'பிரசன்ன நூல்' எடுத்து நாம் படித்திருக்கிறோம். இதில், கடந்த எட்டு மாதங்களிலிருந்து அடுத்து வரக்கூடிய ஐந்து ஆண்டு காலங்கள் வரை, தொழில்நுட்பத் துறைகளில் பணி செய்து கொண்டிருக்கக்கூடிய அல்லது புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள் அல்லது 15, 20 வருடங்கள் அனுபவத்தின் மூலம் நல்ல உயர்ந்த பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள், எல்லாருக்குமே 'வேலை இழப்பு' என்பது எந்த நேரத்தில் வரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில் உங்களுடைய ராசியோ, லக்னமோ அல்லது "என்னுடைய நேர காலம்" என்ற பேச்சோ கிடையாது. உங்களுடைய வேலையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். வேலையின் மீது அதிகமான கடமை, காதல், ஈடுபாடு காட்டுங்கள். எங்கேயும் கோபப்படாதீர்கள், எல்லாவற்றையும் அனுசரணையாக கொண்டு செல்லுங்கள். வயதில் சிறியவர்களிடம் (Ego) அகந்தை, ஏற்றத்தாழ்வுகள் பார்க்க வேண்டாம். இருக்கின்ற வேலையைக் காப்பாற்றிக் கொண்டு நல்லபடியாக வாழ, உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டு, வேலையின் மீது அதிக பற்றுதலோடும், காதலோடும் செய்யுங்கள். கண்டிப்பாக அதற்கு நம் குருநாதர் அகஸ்திய முனிவர் உங்களுக்கு அனுகிரகம் செய்வார் என்பது இப்போது நடக்கக்கூடிய காலகட்டத்தினுடைய பிரசன்ன பலன்.

இதைப்பற்றி இன்னும் நீங்கள் விரிவாகக் கேட்க வேண்டும் என்றால், உங்களுக்கான நாடியை எடுத்துப் பலன் தெரிந்துகொள்ளும் பொழுது, உங்களுக்கான நேர காலத்தை வைத்து இன்னும் தெளிவாகப் தெரிந்து கொள்ளலாம்.

தனியாக தொழில் செய்வது அல்லது கூட்டாக தொழில் செய்வது நல்லதா ?
அவரவர்களுடைய விதிப் பயன் என்று இருக்கிறது. சிலருக்குத் தனித்துச் செயல்படுவது யோகமாக இருக்கும். சிலர் கூட்டு முறையில் செய்தால்தான் யோகமாக இருக்கும். பொதுவான கருத்தாக சொல்லிவிட முடியாது. யாருக்கு என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதன்படி தான் நடக்கும்.

சிலர் தொழில் முயற்சி செய்தாலும் தோல்வியில் முடிகிறது. அது ஏன் ?
எது செய்தாலும் நேர காலம் அறிந்து செயல்படுவது ரொம்ப நல்லது. ஒருவருடைய விதிப் பலன், கர்ம பலன், அவர் சுயமாகத் தொழில் செய்துதான் ஜீவிக்கக்கூடிய (வாழக்கூடிய) அமைப்பில் இருக்கிறது என்றால், அவருடைய நல்ல காலங்கள் வரும் பொழுது தொழிலைத் தொடங்குவது உத்தமம். ஏனென்றால், எல்லாருக்குமே கெட்ட காலங்கள் என்பது உண்டு. மனிதனாகப் பிறக்கக்கூடிய அத்தனை பேருக்கும் வாழ்க்கையில் ஒரு அடி விழுவது என்பது இருக்கும்.

நம்முடைய ஆகாத நேரங்களில், யாருடைய பேச்சையும் கேட்காமல், "நான் நினைத்ததைச் செய்தே தீருவேன்" என்று பிடிவாதமாகச் தொழில் செய்து தோல்வியைச் சந்திக்கிறார்கள். அதன் பிறகு அவர்களுடைய நல்ல காலங்கள் வரும் பொழுது, தொழிலைச் செய்யத் தவறிவிடுகிறார்கள் (பயந்து விடுகிறார்கள்). எனவே, தொழில் செய்வது தவறு கிடையாது, ஆனால் சாதகமான நேரமா? என்ற விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், ஒரு ரூபாய் செலவு செய்வது ரொம்ப எளிது, சம்பாதிப்பது கஷ்டம். அது காசை மட்டும் குறிப்பதல்ல, நேர காலத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

சிலர் பகுதி நேரமாக தொழில் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு முழு நேர தொழில் சரியாக அமையுமா?
ஒருவனுக்குத் தொழில் செய்யக்கூடிய நேர காலங்களும் விதியும் இருந்தால் மட்டும்தான் அவனால் பகுதி நேரமாகச் தொழில் (Side Business) செய்ய முடியும். அதுவும் நம்முடைய கர்ம வினைதான். எல்லாராலும் தொழில் செய்ய முடியாது. திறமைகளுடன் பலர் இருக்கிறார்கள், ஆனால் எல்லாரும் முதலாளியாக முடிவதில்லை.

தொழில் செய்யக்கூடியவருக்கு அறிவு (Knowledge) குறைவாக இருக்கலாம், ஆனால் அவரிடம் வேலை பார்க்கிறவர்களுடைய அறிவுத் திறன் அதிகமாக இருக்கும். ஆனால் அவரிடம் அந்தத் தொழிலைச் செய்வதற்கான யோகம் இல்லாமல் வருத்தப்படக்கூடிய நபர்களும் பலர் உண்டு. பகுதிநேரமாக ஒரு துறையில் ஈடுபட்டு, அதில் வெற்றி பெற்று, பெரிய ஆளானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் சரியான வழிமுறையை எடுத்துக் கொடுத்திருக்கிறோம். "இந்தத் துறை சரியானது தான், இதைத் தொடர்ந்து செய்யுங்கள். இந்த காலகட்டத்தில் வெற்றியைத் தரும், இந்த அனுபவம் தான் உங்களுக்கு அடுத்த வளர்ச்சிக்கு மூல காரணமாக இருக்கும்" என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம். அதன்படி நல்ல நிலையில் இருக்கிறவர்களும் இன்றைக்கு நிறைய பேர் உண்டு

"இந்தத் தொழிலைத் தான் செய்ய வேண்டும்" என்று விதியிருக்கும். ஆனால், நேராக அங்கே போகாமல், அலைந்து திரிந்துவிட்டு, கடைசியில் அந்தத் தொழிலுக்குப் போவதற்குக் காரணம் என்ன ?
"நம் பேச்சுதான் பெருசு, நான் எடுக்கிற முடிவுதான் சரி" என்று நினைத்து வாழக்கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். மகரிஷி சொல்லக்கூடியது, "நான்" என்ற ஆணவத்தை விட்டு எப்பொழுது ஒரு மனிதன் வெளியில் வருகிறானோ, அவன் வாழ்க்கையில் ஜெயிப்பான். அவனுக்கு நல்ல மனிதர்களுடைய சவகாசம் (நட்பு) கிடைக்கும், நல்ல கூட்டணிகள் ஏற்படும், சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்கும். சரியான மனிதர்கள் அவர்கள் கையைப் பிடித்து நல்லதொரு இடத்திற்கு கொண்டு சேர்த்து விடுவார்கள். அதற்கும் 'புண்ணியம்' என்பது ரொம்ப முக்கியமாக இருக்கிறது.

வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்தாமல் நிறைய பிரச்சினைகள் வருகிறது. இதற்கு தீர்வு இருக்கிறதா?
இதில் சூட்சுமங்கள் நிறைய இருக்கிறது. 12 பாவகங்கள் (வீடுகள்) இருக்கின்றன. ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விஷயம் பற்றிப் பேசுகிறது. அதில் 'இரண்டாவது காண்டம்' என்பது, படிப்பு, பணம், சம்பாத்தியம், பேசக்கூடிய வாக்கு, திருமண வாழ்க்கை, பெண்களாக இருந்தால் பிறந்த இடத்திலிருந்து கிடைக்கக்கூடிய செல்வாக்கு, கண் பார்வை என நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

பத்தாவது காண்டம் என்பது தொழில், உத்தியோகம், வியாபாரம், வெளிநாட்டுப் பயணம், கர்ம ஸ்தானத்தைப் பற்றியும் பேசக்கூடியது. ஒரு மனிதனுடைய இரண்டாவது காண்டமும், பத்தாவது காண்டமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய விஷயமாக இருக்கிறது.

இரண்டாவது பாவகத்தினுடைய கர்ம நிலை அவனைப் பாதித்தால் தொழில் அடிபடும். ஒவ்வொரு காண்டத்திற்கும் பாவக பலன் இருக்கிறது. பத்தாவது பாவகத்தினுடைய கர்ம பலன் அவனைப் பாதித்தால், கட்டாயமாக குடும்பமும் பாதிக்கப்படும் என்ற ஒரு சூட்சும விதி இருக்கிறது. இதெல்லாம் ரொம்ப ஆழமாக போகக்கூடிய விஷயம்.

கிரக, கர்ம பலன்கள், இரண்டாவது, பத்தாவது பாவகம் நல்லபடியாக இருந்தால், குடும்பம், தேவைக்கேற்பப் பண வரவும், தொழிலும் நன்றாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், தொழிலில் அவர்களுடைய மனைவி உறுதுணையாக இருப்பார்கள். அது ரொம்ப முக்கியமான விஷயம். இன்றைக்கு எத்தனை பேருக்கு மனைவி உறுதுணையாக இருக்கிறார்கள்? சிலர் நிறைய சம்பாதித்துக் கொடுப்பார்கள், ஆனால் மனைவி உறுதுணையாக இருக்க மாட்டார். எனவே, இதெல்லாம் அவரவர்களுடைய நாடியை எடுத்துப் பார்க்கும் பொழுது எல்லாவற்றிற்கும் தெளிவு கிடைக்கும்.

நன்றி ஐயா! தொழிலுக்கு, முயற்சிக்கும் நாடி ஜோதிடத்தின் வழியாக மகரிஷிகளால் கூறப்பட்டிருக்கும் அறிவுரைகளும் முக்கியம் என்று நிறையவே சொல்லியிருக்கிறார்.



NAADI ASTRO WORLD

Continue your spiritual journey with us.